×
Saravana Stores

மதுரை மாநகரில் தொடர் மழையால் தேங்கிய கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

*மாநகராட்சி சார்பில் உடனடி நடவடிக்கை

மதுரை : மதுரை மாநகரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் தேங்கிய கழிவுநீர், மாநகராட்சி சார்பில் உடனடியாக அகற்றப்பட்டது.மதுரையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீர் உடனுக்குடன் மாநகராட்சி தரப்பில் அகற்றப்பட்டது.

இருப்பினும் சில இடங்களில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டதால் தேங்கிய தண்ணீர் கழிவுநீராக மாறியது. இதன்படி மாநகராட்சி வார்டுகள் 23 மற்றும் 24 ஆகியவற்றில் அமைந்துள்ள போஸ் வீதி, தியாகி பாலு தெரு, சரச் தெரு, மணவாளன் நகர், இந்திராநகர், தாகூர் நகர், எலி அய்யனார் கோவில் தெரு, எம்.ஜி.ஆர். தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தெருக்களிலும் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நின்றது.

மேலும், மழை ெதாடர்ந்ததால் சாலையில் தேங்கிக்கிடந்த கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததோடு, பள்ளிகளுக்கு முன்பாகவும் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்கு பின்பாக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அப்பகுதில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கழிவுநீர் தேங்கிய சாலைகள் வழியாக பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மணவாளன் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செல்லூர் – தத்தனேரி பிரதான சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேநேரத்தில், செல்லூர் போஸ்வீதி, ஹரிகிருஷ்ணா தெரு உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி, குலமங்கலம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மதுரை செல்லூர் பகுதியை சுற்றி போராட்டம் நடைபெற்ற நிலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பொக்லைன் இயந்திரம் மூலமாக கழிவுநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, கழிவுநீர் வெளியேறியதால் பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

The post மதுரை மாநகரில் தொடர் மழையால் தேங்கிய கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Madurai Municipality ,MADURAI ,Madura ,Dinakaran ,
× RELATED மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை:...