இடுபொருட்கள் வாங்க நீண்ட பயணம்: புதிய வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க கோரிக்கை

திருவாடானை,நவ.5: திருவாடானை அருகே வேளாண் இடுபொருட்களைப் பெற தொலை தூரம் செல்ல வேண்டி உள்ளதால், புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்ட எல்லையான புளியால் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கருமொழி ஊராட்சிக்குட்பட்ட கருமொழி, மரிச்சுகட்டி, சானாவயல், வீராப்புலி, காமராஜர்புரம் உள்ளிட்ட கிராமப்பகுதி விவசாயிகள் உறுப்பினர்களாக பதிவு செய்து பயனடைந்து வந்துள்ளனர். மேலும் இந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய காலக்கட்டங்களில் ஆறு மாத காலத்திற்கு வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் குறைந்த வட்டியில் நகைக்கடன் பெறுவதோடு வேளாண் இடுபொருட்களான உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்டவைகளை பெறும் வகையில் பயனடைந்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் மாவட்ட நிர்வாகத்தினர் ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்ட எல்லைப் பகுதியில் செயல்படும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள புளியால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்த கருமொழி ஊராட்சிக்குட்பட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களை மட்டும் பிரித்து கடந்த ஆண்டு நெய்வயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இணைத்துள்ளனர். இதனால் கருமொழி ஊராட்சியில் உள்ள 5க்கும் மேற்பட்ட கிராமப்பகுதி விவசாயிகள் விவசாய காலக்கட்டங்களில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை பெறுவதற்காகவும், வட்டியில்லா பயிர்கடன் மற்றும் குறைந்த வட்டியில் நகைக்கடன் பெறுவதற்காகவும் சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரமுள்ள நெய்வயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தற்சமயம் அப்பகுதி விவசாயிகள் அலைந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இதேபோல் சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள அலங்கூரணி பகுதியில் செயல்படும் ஓரிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இணைந்துள்ள கோவணி, ஆட்டூர், ஆதியாகுடி ஆகிய கிராமப்பகுதி விவசாயிகளும் விவசாய காலக்கட்டங்களில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தினசரி அலைந்து சென்று வேளாண் இடுபொருட்களை வாங்கிச் செல்லும் நிலை உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் அப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான இந்த இரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுமார் எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களையும் அங்கிருந்து விடுவித்து கருமொழி பகுதியை மையமாக வைத்து கருமொழி, வீராப்புலி, சானாவயல் மரிச்சுக்கட்டி, ஆட்டூர், கோவணி, காமராஜர்புரம்,

ஆதியாகுடி ஆகிய கிராமப்பகுதிகளை ஒன்றிணைத்து அப்பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் கருமொழி நூலக கட்டிடம் அருகில் காலியாக உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைத்து அதற்கு புதிய கட்டிடம் கட்டித் தந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இடுபொருட்கள் வாங்க நீண்ட பயணம்: புதிய வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: