டேராடூன்: உத்தரகாண்டில் 200 அடி ஆழ பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் பவுரியில் இருந்து ராம்நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் சுமார் 60 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் மர்சுலா அருகே பயணிகள் பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனையடுத்து பேருந்து சாலையோரத்தில் இருந்த சுமார் 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகில் இருந்த சுகாதார மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலமாக எய்ம்ஸ், ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 36 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள். 24 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து விபத்தில் 36பேர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோரும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ரூ.2லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
The post உத்தரகாண்ட்டில் பயங்கர விபத்து 200 அடி ஆழ பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 10 பெண்கள் உட்பட 36 பேர் பரிதாப பலி: 24 பேர் படுகாயம் appeared first on Dinakaran.