கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் இன்று அதிகாலை தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்த டவுசர் கொள்ளையர் அவரையும், அவரது மனைவியையும் தாக்கி ரூ.15.50லட்சம், 6 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை முல்லை நகரை சேர்ந்தவர் சையது அப்பாஸ்(45). தொழிலதிபர். இவர் தஞ்சை மாவட்டம் திருவையாறில் கான்கிரீட் கம்பிகள் மொத்த வியாபாரம் விற்பனை நிறுவனம் வைத்துள்ளார். இவரது மனைவி ரகமத்நிஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள். சையது அப்பாஸ் வீடும், இவரது மாமியார் வீடும் ஒரே காம்பவுண்டில் அருகருகே உள்ளது.
நேற்றிரவு சையது அப்பாஸ், அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு அறையில் தூங்கினர். குழந்தைகள் சையது அப்பாஸின் மாமியார் வீட்டில் தூங்கினர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மர்மநபர்கள் 2 பேர் வீட்டின் கொல்லைபுற கதவின் தாழ்ப்பாளை கம்பியால் நெம்பி உடைத்து வீட்டுக்குள் புகுந்து அறையில் பீரோவில் வைத்திருந்த ரூ.15.50லட்சம் ரொக்கம், 3பவுன் நகையை திருடினர். பின்னர் அறைக்குள் சென்று தூங்கிக்கொண்டிருந்த ரகமத்நிஷா அணிந்திருந்த 3பவுன் செயினை பறித்தனர். அப்போது கண் விழித்த அவர் அலறியதால் மர்ம நபர்கள் அவரது கன்னத்தில் அறைந்து செயினை பறித்தனர். அப்போது எழுந்த சையது அப்பாஸ் தடுக்க கொள்ளையர்களுடன் போராடினார். அப்போது கையில் வைத்திருந்த உருட்டு கட்டையில் கொள்ளையர்கள், அவரது தலையில் ஓங்கி அடித்ததுடன், கூச்சலிட்டால் கொன்றுவிடுவோம் என மிரட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதில் மண்டை உடைந்து சையது அப்பாசுக்கு ரத்தம் கொட்டியது.
இதுகுறித்து சையது அப்பாஸ் கந்தர்வகோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுபற்றி சையது அப்பாஸ் கூறுகையில், மர்ம நபர்கள் இருவரும் டவுசர் மட்டும் அணிந்திருந்தனர். துண்டு கட்டி முகத்தை மறைத்திருந்தனர். கம்பி விற்ற பணத்தை வாரம் ஒருமுறை வங்கியில் செலுத்துவேன். கடந்த வாரம் வசூலான ரூ.15.50லட்சத்தை 4 நாட்களாக வங்கி விடுமுறை என்பதால் இன்று செலுத்தலாம் என வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அவரது வீட்டில் இருந்த 3 கேமராக்களில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என சோதனையிட்டு வருகின்றனர்.
The post கந்தர்வகோட்டையில் இன்று அதிகாலை; வீடு புகுந்து பெண்ணை தாக்கி பணம், நகை கொள்ளை: டவுசர் கொள்ளையர் அட்டூழியம் appeared first on Dinakaran.