புதுடெல்லி: வெனிசுலா நாட்டில் நடக்கவுள்ள பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்பிக்கு, ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு, அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெனிசுலாவின் காரகாஸ் நகரில், வரும் 4, 5 தேதிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்கும், பாசிசத்துக்கு எதிரான மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க எம்பிக்களை அனுப்பும்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, வெனிசுலா நாடாளுமன்றம் அழைப்பு விடுத்தது. இதில் பங்கேற்க, மாநிலங்களவை எம்பி சிவதாசனை அனுப்ப மார்க்சிஸ்ட் முடிவு செய்தது.
ஆனால், அதற்கான அனுமதியை வழங்க, ஒன்றிய வெளியுறவுத் துறை மறுத்து விட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆளும் கட்சியின் கருத்தியலுக்கு ஒத்துப் போகாத கட்சிகளிடம் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. இது, எதிர்ப்புக் குரலை ஒடுக்கும் செயல். அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் அவற்றின் எம்பிக்களுக்கு கவலை தரும் விஷயமாக இது உள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.
The post வெனிசுலா மாநாட்டில் பங்கேற்க மார்க்சிஸ்ட் எம்பிக்கு அனுமதி மறுப்பு: ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.