- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
- கமலா ஹாரிஸ்
- டிரம்ப்
- வாஷிங்டன்
- அமெரிக்க ஜனா
- டொனால்டு டிரம்ப்
- ஐக்கிய மாநிலங்கள்
- தின மலர்
வாஷிங்டன்: உலகமே எதிர்பார்க்கும் பரபரப்பான அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதில் கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் இடையேயான கடும் மோதலில் வெல்லப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்கா, தனது புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளது. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில், பாரம்பரிய வழக்கப்படி நவம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய் கிழமையான, நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.
இம்முறை வழக்கத்திற்கு மாறாக, தற்போதைய அதிபர் பைடன் தேர்தலில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்கர்கள், இந்திய வம்சாவளிகள், கருப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக கமலா ஹாரிசும், அதிரடி முடிவுகளின் அடையாளமாக டிரம்ப்பும் இருப்பதால் இருவர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் யார் வெல்வார்கள் என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.
கருத்துக்கணிப்புகளில் கூட ஆரம்பத்தில் முன்னிலை வகித்த கமலா ஹாரிசை தேர்தல் நெருங்க நெருங்க டிரம்ப் மிகவும் நெருங்கி வந்து விட்டார். 538 என்கிற நிறுவனம் நடத்திய நேரடி தேர்தல் கணிப்பில் நேற்றைய நிலவரப்படி கமலா ஹாரிசுக்கு 48 சதவீதம் பேரும், டிரம்ப்புக்கு 46.8 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வெறும் 1.2 சதவீத முன்னிலையுடன் கமலா உள்ளார். இதனால், தேர்தலில் வாக்களிக்க அமெரிக்கர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது.
நேரடியாக அல்லது தபால் மூலமாக முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி நேற்று வரையிலும் கிட்டத்தட்ட 7 கோடி பேர் வாக்களித்து விட்டனர். மொத்தம் 18.65 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சாமானிய அமெரிக்கர்கள் மட்டுமின்றி பல உலகப் புகழ் பெற்ற பிரபலங்களும் தேர்தலில் ஆர்வம் காட்டி உள்ளனர். முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டனின் ஆதரவை பெற்ற கமலா ஹாரிசுக்கு பல ஹாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாப் இசைப் புகழ் டெய்லர் ஸ்விப்ட், அவென்சர்ஸ் படத்தில் ஹஸ்க் கதாபாத்திரத்தில் நடித்த மார்க் ரப்பலோ, பிளாக் விடோ நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்ஸ்சன், கேப்டன் அமெரிக்கா ஹீரோ கிரிஸ் இவான்ஸ், அயர்ன் மேன் நடிகர் ராபர்ட் டவ்னே ஜூனியர், பிரபல நடிகைகள் ஜெனிபர் லோபஸ், மடோனா, பெயான்ஸ் போன்றவர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னரும், பிரபல நடிகருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரும் கமலாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டி உள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் டிரம்ப்பின் கடும் எதிர்பார்ப்பாளர் என்பதால் இம்முறை தனது ஓட்டு கமலாவுக்கு தான் என அறிவித்துள்ளார். டிரம்ப்புக்கு இத்தகைய வரவேற்பு இல்லை என்றாலும், உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான் மஸ்க் ஆதரவு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2016 தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு வெறும் 5000 அமெரிக்க டாலர் மட்டுமே நிதி கொடுத்தவரான மஸ்க் இம்முறை டிரம்ப்பின் பிரசாரத்திற்காக சுமார் 9,000 கோடியை தண்ணீராக செலவழித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதி வரையிலும் டிரம்ப்புக்கு ஒரு பைசா கூட நன்கொடை தராத மஸ்க் திடீரென அதிபர் தேர்தலில் இவ்வளவு ஆர்வம் காட்டுவது அமெரிக்கர்களை பிரமிக்க வைத்துள்ளது.
தன் மீதும் தனது நிறுவனங்களின் மீதும் பைடன் நிர்வாகம் பல வழக்குகளை தொடுத்ததால் அதிருப்தி அடைந்த மஸ்க், டிரம்ப்பை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டுமென புதிய பிரசார மற்றும் நன்கொடை வசூலிக்கும் நிறுவனத்தை கூட தொடங்கி பம்பரமாக வேலை செய்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் களம் களைகட்டி உள்ளது. நாளை மறுதினம் வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
* எப்போது முடிவு தெரியும்?
வாக்குப்பதிவு முடிந்த உடனே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். இந்திய நேரப்படி வரும் 6ம் தேதி பிற்பகலுக்குப் பிறகு முடிவுகள் தெரியலாம். 2020 அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து 4 நாட்களுக்கு பிறகு தான் முடிவுகள் தெரிந்தன. பென்சில்வேனியா மாகாணத்தின் முடிவு வெளியாவதில் சிக்கல் நிலவியது. அப்போது, ஜோ பைடன், டிரம்ப் போட்டியிட்டனர். அதுவே 2016ல் ஹிலாரி, டிரம்ப் இடையேயான போட்டியில் அடுத்த நாள் அதிகாலையிலேயே தேர்தல் முடிவு வெளியானது. இத்தேர்தலில் வெற்றி பெறுபவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிபராக பொறுப்பேற்பார்.
* சாதிப்பாரா கமலா?
கமலா ஹாரிஸ் வெல்லும் பட்சத்தில் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை படைக்கலாம். 2016ல் இதே போல எதிர்பார்ப்புகளுடன் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், இதே டிரம்ப்பிடம் தோற்றார். அப்போதும் பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
The post உலகமே எதிர்பார்க்கும் பரபரப்பான மோதல் நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி, வெல்லப் போவது யார்? appeared first on Dinakaran.