கலர்புல் வெடிகள் கரன்சியை கொட்டியது: ரூ.6000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை; ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது சிவகாசி

சிவகாசி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசி பட்டாசுகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதிகளில் (குட்டி ஜப்பான்) இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன.

கடந்த 2016 மற்றும் 2019க்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையானது. கொரோனா கால கட்டங்களில் 2020ல் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை முறையே முந்தைய ஆண்டுகளின் சராசரியை விட குறைவாக இருந்தது. தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது. அதனை முறியடித்து கடந்த 2022ல் ரூ.6 ஆயிரம் கோடிக்கு முதல் முறையாக வர்த்தகம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் இருக்கும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். தொடர் வெடி விபத்துகள், கடைசி கட்ட உற்பத்தி பாதிப்பு போன்ற காரணங்களால் கடந்த ஆண்டும் ரூ.6 ஆயிரம் கோடி விற்பனை இலக்கையே எட்ட முடிந்ததாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்தனர். நடப்பாண்டு பட்டாசு உற்பத்தி சீசன் காலமான கடைசி நேரத்தில் தொடர் மழையினால் சீதோஷ்ண சூழ்நிலை காரணமாக பட்டாசு உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது.

மேலும் ஆரம்ப கால கட்டங்களில் பட்டாசு விபத்தில் நடந்த உயிரிழப்பு, தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட தொடர் ஆய்வு போன்றவற்றால் பட்டாசு உற்பத்தியில் 25 சதவீதம் பின்னடைவு இருந்தது. எனினும், நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட பட்டாசுகளில் 95 சதவீதம் விற்பனையானதாகவும், நடப்பாண்டு 75 சதவீத பட்டாசு உற்பத்தி மட்டுமே நடந்த போதிலும், கடந்த வருடத்தை போலவே இந்தியா முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு வணிகம் நடந்துள்ளதாகவும், 3வது முறையாக இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் (டான்பாமா) தலைவர் சோனி கணேசன் கூறும்போது, ‘‘பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தவும், சரவெடி உற்பத்திக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் மொத்த உற்பத்தியில் 100 சதவீத பட்டாசு வகைகளில் 60 சதவீதம் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும் வெடிகளும், 20 சதவீதம் சரவெடி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் 20 சதவீத பசுமை பட்டாசு வகைகள் மட்டுமே அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு சில்லரை விற்பனையில் தீபாவளிக்கு 6000 கோடி ரூபாய் அளவிற்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட 90 சதவீத பட்டாசுகள் அனைத்தும் விற்பனையாகி உள்ளன.

சில்லறை விற்பனையில் நடப்பாண்டு ரூ.6000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன’’ என்றார். இதுகுறித்து விற்பனையாளர்கள் கூறும்போது, ‘‘பேரியம் நைட்ரேட் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி சரவெடி தயாரிக்கவும் அனுமதித்தால் வரும் காலங்களில் ஆண்டிற்கு ரூ.10 அயிரம் கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும். இதன் மூலம் வருவாய் அதிகரித்து நாட்டின் வர்த்தகமும் அதிகரிக்கும்’’ என்றனர்.

The post கலர்புல் வெடிகள் கரன்சியை கொட்டியது: ரூ.6000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை; ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது சிவகாசி appeared first on Dinakaran.

Related Stories: