- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- Puduvai
- காரைக்கால்
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழையும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், கிழக்கு திசை காற்று முழுமையாக தென் இந்திய பகுதிகளில் பரவி பருவமழை முழுவதுமாக தொடங்க உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்தே மழைக்கான வாய்ப்பு தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தென்னிந்திய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். இந்நிலையில் பருவமழையின் தீவிரத்தை காட்டும் வகையில் வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தெற்கு வங்கக்கடலில் வரும் 7ம் தேதி வியாழக்கிழமை அல்லது 8ம் தேதி வெள்ளிக்கிழமை ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று வட தமிழக பகுதிகளை நோக்கி நகரக் கூடும். இதையடுத்து நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, ராயல்சீமா, கேரளா உள்ளிட்ட தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது இயல்பைவிட 23 சதவீதம் அதிகமாக மழை பொழிவு இருக்கும் என கூறப்படுகிறது. இதில் நவம்பர் முதல் வாரத்தில் இயல்புக்கு குறைவாகவும், 2-வது வாரத்தில் இயல்பைவிட அதிகமாகவும் மழை பதிவாகும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதைப்போன்று நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
4ம் தேதி ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், 5ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள் எச்சரிக்கை ஏதுமில்லை. கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.