×

இந்த தீபாவளிக்கு ஆரோக்கியமான ரிட்டர்ன் கிஃப்ட்!

நன்றி குங்குமம் தோழி

தீபாவளி வந்தாச்சு. இப்பவே பட்டாசு, உடைகள், பலகாரங்கள் என எங்கு வாங்கலாம்… என்ன செய்யலாம்னு பிளான் செய்ய ஆரம்பிச்சிருப்போம். வீட்டில் அம்மா முறுக்கு, அதிரசம் செய்தாலும், அந்த கொண்டாட்டத்தை மேலும் சிறக்கச் செய்வது ஸ்வீட்ஸ்தான். வீட்டிலேயே விதவிதமான பலகாரங்களை செய்தாலும். புதுசு புதுசா மார்க்கெட்டுக்கு வர்ற ஸ்வீட்ஸ்களையும் நாம வாங்கி சுவைப்போம். அதே போல் தீபாவளி பண்டிகையின் போது பலருக்கும் கிஃப்ட் கொடுக்கும் பழக்கம் உண்டு. அப்படி நாம அன்போட கொடுக்கும் பரிசுகள் ஆரோக்கியமானதா இருந்தால் இன்னும் சிறப்பு தானே. அப்படி என்ன ஆரோக்கியமானதா கொடுப்பதுன்னு யோசிக்கிறீங்களா? அந்தக் கவலை இனி வேண்டாம். இந்த வருஷம் விதவிதமான தீபாவளி ரிட்டர்ன் கிஃப்ட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார் ‘தேன் சுவை’ நிறுவனத்தின் நிறுவனர் ரேவதி.

“தீபாவளிக்கு என தனிப்பட்ட ரிட்டர்ன் கிஃப்ட் பாக்ஸை அறிமுகப்படுத்தி மூன்று வருஷமாகிறது. அன்று முதல் இன்று வரை இதற்கு நல்ல வரவேற்பு இருக்கு. காரணம், நாங்க இந்த கிஃப்ட் பாக்ஸில் வழக்கமான ஸ்வீட்ஸ் மற்றும் மிக்சர் பொட்டலங்களை தருவதில்லை. ஆரோக்கியமான உலர் பழங்கள், கொட்டைகள், விதை வகைகள் போன்றவற்றைதான் வைத்து தருகிறோம். அதாவது, பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை, உலர் பழங்கள், உலர் பேரீச்சை, விதை வகைகள்தான் இருக்கும்.

ஆரோக்கியமான உணவுகளை மற்றவர்களுக்கு கொடுத்து அவர்களை மேலும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். நாங்க இந்த கிஃப்ட் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பவும் வடிவமைத்து தருவதால், பலர் தொடர்ந்து எங்களுக்கு ஆர்டர் கொடுத்து வருகிறார்கள்’’ என்ற ரேவதி, ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் விற்பனை தொழிலை தொடங்கியதை பற்றி பகிர்ந்துகொள்கிறார்.

“பொதுவாகவே சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களின் விற்பனை களைக்கட்டும். இங்கு ஒரு தெரு முழுக்க இந்தக் கடைகள் தான் இருக்கும். மொத்த விற்பனையிலிருந்து சில்லறை வியாபாரம் வரைக்கும் நடக்கும். இதற்கு மட்டுமே பெயர் போன இடத்தில் முதலில் நாங்க கடையை ஆரம்பித்த போது எங்களுக்கும் சவாலாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் பாரம்பரிய உணவுப் பொருட்களைதான் விற்பனை செய்தோம்.

அதன் பிறகுதான் ட்ரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் விற்பனையை தொடங்கினோம். பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது, எங்க கடை இருக்கும் பஜார் முழுக்க வியாபாரிகள் இந்தத் தொழிலை தான் செய்து வராங்கன்னு. அதனால இதில் ஏதாவது புதுமையா செய்தா தான் தொழிலில் நிலைத்திருக்க முடியும்னு புரிந்தது. அதன் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமா இந்த பஜார்ல இல்லாத பொருட்களை நாங்க அறிமுகம் செய்ய ஆரம்பித்தோம்.

பாரம்பரிய அரிசி வகைகளுடன், பாரம்பரிய தானியங்கள், சிறு தானியங்களையும் விற்பனைக்கு கொண்டு வந்தோம். அதாவது, அரிசிகளில் பூங்கார், மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, குள்ளக்கார், 60 வாதம் குறுவை சம்பா, நவரா, சீரக சம்பா, துளசி சீரக சம்பா, தூயமல்லி, தங்க சம்பா, தங்க சம்பா கைக்குத்தல், கிச்சலி சம்பா, கருப்பு கவுனி அரிசி வகைகளும், சாமை, வரகு, தினை, குதிரைவாலி, கம்பு, ராகி போன்ற சிறுதானிய வகைகளும் விற்பனை செய்தோம்.

அதனைத் தொடர்ந்து இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் அறிமுகப்படுத்தினோம். அதில் எங்களின் சிக்னேச்சர் என்று சொல்லக்கூடியது டேட்ஸ் வித் அல்மண்ட் சாக்லேட். ஆரம்பத்தில் பேரீச்சைப் பழத்தை அப்படியே விற்பனை செய்தாங்க. அதன் பிறகு விதைகளை நீக்கி விற்பனை செய்யப்பட்டது. நாங்க புதுசா அதன் விதைக்கு பதில் பேரீச்சைப்பழத்திற்குள் பாதாமை வைத்து தயார் பண்ணியிருக்கோம்.

பாதாமை அப்படியே வைக்காமல் முதலில் ஊற வைத்து பிறகு உலர வைத்து பேரீச்சை பழத்துக்குள் வைத்து கொடுக்கிறோம். இதற்கு நாங்க கலாஸ் என்ற வகையான பேரீச்சையைதான் பயன்படுத்துகிறோம். காரணம், இதில் அதிக அளவில் நார்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாம இது வாயில் போட்டதும் சுலபமா கரையக்கூடியது. மிருதுவானது. மேலும் பேரீச்சையுடன் உள்ளே இருக்கும் பாதாமை சேர்த்து கடித்து சாப்பிடும்போது இன்னும் சுவையாக இருக்கும். இந்த டேட்ஸ் வித் அல்மண்டுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கு.

நாட்டுச் சர்க்கரை ஆரோக்கியமானதுதான். அதை கூடுதல் ஆரோக்கியமான முறையில் கொடுக்க நவரச நாட்டுச் சர்க்கரையை அறிமுகப்படுத்தியிருக்கோம். இதில் கரும்பு, நெல்லி, வெண்டை, சுக்கு, வால்மிளகு, துளசி, ஏலக்காய், வெற்றிலை, தூதுவளை போன்ற 9 வகை மருத்துவ குணங்கள் உள்ளன. அவை இருமல், சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் போன்ற உடல் உபாதைகளுக்கு தீர்வாக இருக்கும். இதை அப்படியே சுடுநீரில் கலந்து சாப்பிடலாம் அல்லது பசும்பாலில் கலந்தும் சாப்பிடலாம்.

இதேபோல சிறுதானிய நூடுல்சும் உள்ளது. இவை குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் கொடுக்காது. இதுபோல பாரம்பரிய உணவுப்பொருட்களை மதிப்புக்கூட்டலாக தயாரிக்கும் எண்ணம் உள்ளது’’ என்றவர், பாரம்பரிய உணவுப்பொருட்களின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். “நான் இந்தத் தொழிலை துவங்குவதற்கு முன் எங்க குடும்பத்தில் அனைவரும் பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்களை தான் சாப்பிட்டு பழக்கப்பட்டிருக்கோம்.

அதனால் எங்களின் ஆரோக்கியம் நன்றாக இருந்தது. அதனால்தான் நாங்க இந்தத் தொழிலை தொடங்கினோம். இப்போ மாறி இருக்கும் உணவுப்பழக்கத்தால் நிறைய உடல் பாதிப்புகள் தான் வருது. ஆரம்பத்துல யாருக்கும் இதில் விழிப்புணர்வு இல்லை என்றாலும் இப்போது எல்லோரும் திரும்பவும் பாரம்பரிய ஆரோக்கிய உணவுமுறைக்கு மாறி வராங்க. இதன் பிறகும் நிறைய மக்களும் ஆரோக்கியமான உணவுப்பொருட்களை சாப்பிட தொடங்குவாங்க. அப்போ இந்த பாரம்பரியமான உணவுப் பொருட்களோட மதிப்பு அதிகமா இருக்கும்.

இது போன்ற தொழிலை தொடங்க விரும்புற பெண்கள் ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கலாம். நேரடி வர்த்தகர்களிடம் பொருட்களை வாங்கி விற்பனை செய்யலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ்களை பொறுத்தவரை எடுத்தவுடனேயே பெரிய அளவில் தொடங்கினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கு. காரணம், இதனை நீண்ட நாட்களுக்கு ஸ்டாக் வைக்க முடியாது. கொஞ்ச கொஞ்சமா தொடங்கி, வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினதும் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

இந்த பஜார் முழுக்க ட்ரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் விற்பனை நடந்தாலும் எங்களுக்கான வியாபாரம் நல்லபடியாகத்தான் நடக்கிறது. காரணம், அதே பொருட்களை புதுமையான முறையில் விற்பனை செய்கிறோம். இந்த தீபாவளிக்கு பலவித ரிட்டர்ன் கிஃப்ட் பாக்ஸ்களை அறிமுகப்படுத்திஇருக்கோம். பண்டிகை நாட்களில் உறவினர்கள், நண்பர்கள், அன்பானவர்களுக்கும் ஆரோக்கியமான கிஃப்ட் பாக்ஸ்களை கொடுத்து சந்தோஷத்தை பகிர்ந்து ெகாள்ளுங்க” என்கிறார் ரேவதி.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன் அருணாச்சலம்

The post இந்த தீபாவளிக்கு ஆரோக்கியமான ரிட்டர்ன் கிஃப்ட்! appeared first on Dinakaran.

Tags : Diwali ,
× RELATED மீனாட்சி படம் திருட்டு கதையா?