மதுரை வெள்ள பாதிப்புக்கு தீர்வு ரூ.11.9 கோடியில் சிமென்ட் கால்வாய்: அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பின் முதல்வர் உத்தரவு

மதுரை: மதுரை வெள்ள பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் செல்லூர் கால்வாயில் இருந்து நீர் வெளியேற ரூ.11.9 கோடியில் சிமென்ட் கால்வாய் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்து உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் நேற்று பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து மதுரை வந்து விமானம் மூலம் சென்னை சென்றார். முன்னதாக அவர் மதுரையில், ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் சமீபத்தில் பெய்த மழை, வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

அப்போது, மதுரையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதியில் மீண்டும் இதே போன்றதொரு நிலை ஏற்படாமல் இருக்க, உடனடியாக 290 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் கால்வாய் அமைக்கவேண்டியதன் தேவை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேறுவதற்கு ரூ.11.9 கோடி செலவில் சிமென்ட் கால்வாய் அமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல்வரின் உடனடி நடவடிக்கையால் செல்லூர் பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர்.

The post மதுரை வெள்ள பாதிப்புக்கு தீர்வு ரூ.11.9 கோடியில் சிமென்ட் கால்வாய்: அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பின் முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: