×

தீபாவளி பலகார பக்குவங்கள்

நன்றி குங்குமம் தோழி

*உளுந்து வடை செய்யும்போது மாவை உருட்டி வைத்துக்கொண்டு, அரிசி மாவை கையால் லேசாகத் தொட்டு, பிறகு வடை தட்டினால் வடை மேலே மொறுமொறு என்றும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

*முறுக்கு வெண்மையாக இருக்க ஒரு கிலோ அரிசிக்கு கால் கிலோ உளுந்தம் பருப்பு வறுத்துப் போட்டு மாவாக்கி முறுக்கு செய்தால் வெண்மையாக இருக்கும். பெருங்காயம் சேர்க்கக்கூடாது.

*ஒரு பங்கு கடலை மாவுடன், இரண்டு பங்கு பாசிப்பருப்பு மாவு என்ற அளவில் சேர்த்து மைசூர்பாகு செய்தால் வாயில் போட்டவுடன் கரைந்துவிடும்.

*தேங்காய் பர்பி செய்வதற்கு சர்க்கரையை அப்படியே சேர்க்காமல், மிக்ஸியில் போட்டு பொடி செய்து சேர்த்தால் சாப்பிட மிருதுவாக இருக்கும்.

*பாதுஷா செய்தபின், பூஸ்ட் அல்லது போர்ன்வீட்டாவை திக்காக கரைத்து, பாதுஷாவின் மீது ஆங்காங்கே கைகளால் தெளித்தால், வித்தியாசமான டிசைனில் பாதுஷா தயார்.

*முறுக்கு செய்ய மாவு தயாரிக்கும்போது நன்றாக கனிந்த ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்துப் பிசைந்து முறுக்கு செய்தால் தனி ருசியாக இருக்கும். விரைவில் நமுத்துப் போகாது.

*அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிதளவு சமையல் சோடா உப்பு சேர்த்து, பிசைந்து தட்டினால் அதிரசம் நன்கு உப்பி, உள்பக்கம் நன்கு வெந்து, மிருதுவாக, சுவையாக இருக்கும்.

*அதிரசத்துக்கு வெல்லப்பாகு காய்ச்சும் போது வெல்லத்துடன், நெல்லிக்காய் அளவு புளியும், அரை தேக்கரண்டி அளவு மஞ்சள் தூளும் சேர்த்துக்கொண்டால் அதிரசம்
மிருதுவாகவும், எண்ணெய் அதிகம் குடிக்காமலும், அருமையாக வரும்.

*ரவா லட்டு, பொட்டுக்கடலை மாவு லட்டு செய்யும்போது, மாவு கலவையில் கால் பங்கு பசும்பால் சேர்த்து செய்தால் மிக ருசியாக இருக்கும்.

தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.

The post தீபாவளி பலகார பக்குவங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED குளிர் காலமும் வைட்டமின்களும்!