என் பொறுமைக்கு கிடைத்த பரிசு!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் வேலைக்குப் போறாங்க. வீட்டையும் பார்த்துக்கிறாங்க. இப்படி அவங்க மல்டி டாஸ்கிங்கா இருக்காங்கன்னு சொல்வது இன்றைய சூழலுக்கு இயல்பாகிவிட்டது. இவை எல்லாம் தாண்டி அவர்களுக்கு என ஒரு தனிப்பட்ட ஃபேஷன் இருக்கும். சிலருக்கு நடனம் பிடிக்கும். ஒரு சிலர் பாட்டு, சமையல்னு சொல்வாங்க. மருத்துவரான அமுதாவிற்கு மாடலிங் துறை மேல் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர் எடுத்த முதல் படிதான் மிசஸ் வேர்ல்ட் இன்டர்நேஷனல். அதில் அவர் மிசஸ் ஹார்மனி என்ற பட்டமும் வென்றுள்ளார். மருத்துவரான இவர் தன்னுடைய புதுப் பயணம் குறித்து பகிர்ந்தார்.

‘‘நான் அடிப்படையில் பல் மருத்துவர். என் உடல் நலம் காரணமாக என்னால் அதனை தொடர முடியவில்லை. சென்னையில் உள்ள பிரபல மருத்துவ இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதில் மனிதவளத் துறையில் முக்கிய பதவியில் இருக்கிறேன். எனக்கு மருத்துவத்தை தாண்டி நிர்வாகத் துறை மேல் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் எம்.பி.ஏ படிக்க விரும்பினேன். ஐ.ஐ.எம்மில் விண்ணப்பித்தேன். அதில் ராய்ப்பூரில் உள்ள ஐ.ஐ.எம்மில் எனக்கு சீட் கிடைத்தது. தற்போது இரண்டாவது ஆண்டு பயின்று வருகிறேன்’’ என்றவர் ஃபேஷன்
துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காரணத்தை விவரித்தார்.

‘‘என் ஒவ்வொரு உயர்விற்கும் என் அம்மா மட்டுமில்லாமல் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் உறுதுணையாக இருந்து வராங்க. என் அம்மா கேன்சர் பேஷன்ட். எனக்கு எம்.பி.ஏ அட்மிஷன் கிடைச்ச போதுதான் அம்மாவிற்கு கேன்சர் 4வது ஸ்டேஜ் உறுதியானது. இந்தப் பிரச்னையை அப்பாவின் இறப்பிற்கு பிறகுதான் கண்டறிந்தோம். அப்பாவின் மறைவுக்குப் பிறகு அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமானது.

முதலில் அப்பாவின் இழப்பினால் இப்படி இருப்பதாக நினைத்தோம். ஆனால் அது நீடிக்கவே, மருத்துவரிடம் காண்பித்த போதுதான் அம்மாவின் பிரச்னை என்ன என்று தெரியவந்தது. ஆரம்பத்தில் நான் மேற்படிப்பு படிக்க போகவில்லை என்று முடிவெடுத்தேன். ஆனால் அம்மாதான் இந்த சீட் கிடைப்பதே கஷ்டம். அதனால் நீ போய் படின்னு எனக்கு தைரியம் சொன்னாங்க. எனக்கு அம்மா, மாமியார், கணவர் மட்டுமில்லை நான் வேலை செய்யும் நிறுவனத்தில் என் மேலதிகாரி என அனைவரும் என் நிலைமை புரிந்து கொண்டு எனக்கு பல விஷயங்களில் சப்போர்ட்டாக இருந்தார்கள்.

எம்.பி.ஏ படிக்கும் போதுதான் என் பேராசிரியர் மூலம் மிசஸ் வேர்ல்ட் இன்டர்நேஷனல் போட்டி நடைபெறுவது குறித்து தெரிய வந்தது. அவர்தான் என்னை இதில் பங்கு பெறச்சொல்லி ஊக்குவித்தார். ஏற்கனவே வீட்டில் அம்மாவின் உடல் நிலை சரியில்லை. இதில் நான் படிக்க வந்ததே பெரிய விஷயம். அழகிப்போட்டியில் வேறு பங்கு பெறணுமா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. வீட்டில் சொன்ன போது உன்னால் முடியும்னு ஊக்கம் ெகாடுத்தாங்க.

முதல் கட்ட தேர்வு அஹமதாபாத்தில் நடைபெற்றது. அதில் இருந்து 150 பேரை கடைசி கட்ட போட்டிக்காக தேர்வு செய்தாங்க. தேர்ச்சிப் பெற்றதில் நானும் ஒருத்தி. அதன் பிறகு தில்லியில் ஒரு வாரம் இதற்கான கடைசிக் கட்ட பயிற்சியினை தொடர்ந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் நான் மிசஸ் ஹார்மனி பட்டம் பெற்ேறன்’’ என்றவர் உலக அழகிப் போட்டியில் அவரின் அனுபவங்களை பகிர்ந்தார்.

‘‘அழகிப் போட்டி மேடையில் நடக்கணும், அதன் பிறகு அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கணும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அங்கு போன பிறகு தான் இது முழுக்க முழுக்க வேறு உலகம்னு எனக்கு புரிந்தது. என் வாழ்க்கை முறை வேறு, இவர்களின் வாழ்க்கை முறை வேறு. படித்தோம், டிகிரி பெற்றோம், வேலைக்கு போனோம் அவ்வளவுதான் என் வாழ்க்கை. ஆனால் இங்கு அப்படி இல்லை. நாம் நடக்கும் விதம், மற்றவர்களிடம் பழகும் முறை, சாப்பிடுவது, நம்மை பராமரித்துக் கொள்வது என பல விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். அதில் நான் ரொம்பவே கஷ்டப்பட்டது 3 இஞ்ச் உயரமான ஹீல்சினை அணிந்து நாள் முழுதும் நின்றதுதான்.

தில்லியில் ஒரு வாரம் எங்களுக்கு ரொம்பவே கடுமையான பயிற்சி இருந்தது. இந்த துறைப் பற்றி தெரிந்தவங்களுக்கு அவர்கள் சொல்வது புரியும். ஆனால் எனக்கு அதைப் புரிந்து கொள்ளவே கொஞ்சம் தாமதமானது. போஸ் கொடுப்பது முதல், மேடையில் நடக்கும் வரை அனைத்திலும் நம்முடைய அணுகுமுறையை வெளிப்படுத்தணும். இந்த ஒரு வாரம் பயிற்சியின் போது நம்மை மதிப்பிடவும் செய்வாங்க. அங்கு வந்திருந்த பல பெண்கள் மாடலிங் துறை குறித்து தெரிந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு ஈடாக செய்ய முடியவில்லை என்று நினைக்கும் போது அதுவே மனதளவில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்னு தோணும். அந்த சமயத்தில் என் குடும்பத்தினர்தான் எனக்கு மிகவும் ஆறுதலா இருந்தாங்க.

தினமும் ஒவ்வொரு விஷயம் சொல்லித் தருவாங்க. டேலன்ட் ரவுண்ட், யோகா, மென்டல் வெல்னெஸ், டேபிள் மேனர்ஸ், போர்க் ஸ்பூன் பயன்படுத்தி எப்படி சாப்பிடணும். அதை எவ்வாறு பிளேட்டில் வைக்கணும், போட்டோஷூ ட், தீமாட்டிக் ராம்ப் வாக்… இவ்வாறு பல செஷன் இருக்கும். அதை எல்லாம் கடந்து தான் கடைசி நாள் போட்டிக்கு தயாராகுவோம். மொத்தம் பத்து பேரை தேர்வு செய்வாங்க. அதில் முதல் இரண்டு நபர்களை வின்னராக அறிவிப்பாங்க.

அதன் பிறகு ஸ்பெஷல் கேட்டகரியில் நான் மிசஸ் வேர்ல்ட் ஹார்மனி பட்டம் பெற்றேன். இந்தப் பட்டம் எனக்கு கிடைக்க முக்கிய காரணம் எந்த சூழலையும் என்னால் மிகவும் சாந்தமாக கையாள முடியும் என்பதுதான். காரணம், அங்கு நம்மை அறியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாவோம். சிலர் கோபத்தில் வெடிப்பாங்க, சிலர் அழுதிடுவாங்க. நான்
எவ்வளவு பிரச்னை வந்தாலும் என்னால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் விடவில்லை. அதற்கு கிடைத்த பரிசுதான் இது. பங்களாதேஷ், துபாய் என பல நாடுகளில் இருந்து வந்திருந்தாங்க. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த எனக்கு ஒரு பட்டம் கிடைத்திருக்குன்னு நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு.

இன்று பெண்கள் வேலைக்கு போறாங்க. தங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனாலும் குடும்பம் என்று வந்துவிட்டால் அவங்க அதற்குதான் முக்கியத்துவம் தராங்க. வேலை, குடும்பம், குழந்தைன்னு அனைத்தும் அவர்களால் பார்த்துக் ெகாள்ள முடியும். அதேபோல் தான் இந்த அழகிப் பட்டமும். பலர் குழந்தை பிறந்தாச்சு. இப்ப எதுக்கு இந்தப் போட்டியில் எல்லாம் கலந்துக்கணும்ன்னு கேட்டாங்க. ஆனால் எனக்கு ஏதாவது செய்யணும்னு எண்ணம் இருந்தது. என் வீட்டிலும் என் விருப்பத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. கல்யாணம், குழந்தை ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடியது. அதைத் தாண்டி அவர்களுக்கான ஒரு தனிப்பட்ட இடம் உள்ளது. அதில் அவர்களுக்கு பிடிச்ச விஷயங்களை செய்யலாம்.

நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மற்றும் டயட் இருக்கலாம். அடுத்து நம்முடைய மனநிலை. அதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். உன்னால் முடியும்னு நம் மனம் நினைக்கணும். அப்பதான் நாம் அந்த இலக்கை அடைய முடியும். அதனால்தான் எனக்கு சம்பந்தம் இல்லாத இந்தப் போட்டியில் நான் பங்கு பெற்றேன், பட்டமும் வென்றிருக்கேன். இது எனக்குள் பெரிய தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

என்னுடைய அன்றாட வேலை மட்டுமில்லாமல், விளம்பரம் அல்லது குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதையும் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அடுத்து கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்த உதவியினை செய்ய இருக்கிறேன். சமூகம் எனக்கு நிறைய கொடுத்திருக்கு. அதை நான் இந்த முறையில் திருப்பி கொடுக்க விரும்புகிறேன்’’ என்றார் அமுதா.

தொகுப்பு: நிஷா

The post என் பொறுமைக்கு கிடைத்த பரிசு! appeared first on Dinakaran.

Related Stories: