சென்னையில் களைகட்டிய காரைக்குடி பெண்களின் சந்தை!

நன்றி குங்குமம் தோழி

காரைக்குடி… அரண்மனைகள், ஆத்தங்குடி டைல்ஸ்கள் மற்றும் உணவு வகைகளுக்கு பெயர் போன ஊர். பாரம்பரியம் மனம் மாறாமல் இருக்கும் அவர்களின் உணவுகள், கலைப்பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறிப்பாக சென்னை சந்தையில் கிடைத்தால் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும். சந்தையில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும் பெண்கள்.

அனைவரும் காரைக்குடியினை சேர்ந்த சிறு தொழில் முனைவோர்கள். இவர்களுக்காகவே இந்த சந்தையினை சென்னையில் வருடா வருடம் அமைத்து தருகிறது காரைக்குடி நகரத்தார் சங்கம். இந்த வருடம் சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற சந்தையினைப் பற்றி விவரித்தார்கள் அமைப்பின் உறுப்பினர்களான விசாலாட்சி கணேஷ் மற்றும் விஜி பழனியப்பன்.‘‘காரைக்குடி மக்களுக்காகவே சென்னையில் 2015ல் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் தற்போது 300 பேர் உறுப்பினராக இருக்கிறோம்’’ என்று பேச ஆரம்பித்தார் விஜி பழனியப்பன். ‘‘எங்க அனைவரின் சொந்த ஊர் காரைக்குடி. தொழில், வேலை, திருமணம் காரணமாக சென்னையில் செட்டிலாயிட்டோம்.

இங்குள்ளவர்கள் சிறிய சதவிகிதம் என்பதால், ஒருவர் மூலமாக மற்ெறாருவர் என்று எங்களுக்குள் தொடர்பு இருந்து வந்தது. அதில் பெரும்பாலானோர் உறவு முறையாகத்தான் இருப்பார்கள். அந்த சமயத்தில்தான் எங்க மக்களின் நலனுக்காக ஒரு சங்கம் அமைத்தால் என்ன என்று ேதான்றியது. அதன் அடிப்படையில்தான் 2015ல் காரைக்குடி நகரத்தார் சங்கம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவருக்கு தேவையான உதவியினை அனைவரும் சேர்ந்து பகிர்ந்து செய்ய முடிந்தது. சங்கம் ஆரம்பித்த போது மருத்துவம், கல்வி, கல்யாணம் போன்றவற்றுக்கு நிதி உதவிகளை செய்து வந்தோம்.

அப்போதுதான் பல பெண்கள் சிறிய அளவில் தொழில் செய்து வருவது தெரிய வந்தது. அவர்களுக்கு ஒரு பிளாட்ஃபார்ம் அமைத்துக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அவர்களுக்காகவே 2019ல் காரைக்குடி சந்தையை துவங்கினோம். இதன் மூலம் அவர்களின் தொழிலுக்கு மேலும் ஒரு வளர்ச்சிப் பாதையை ஏற்படுத்தி தர முடியும் என்று நினைத்தோம்’’ என்றவரை தொடர்ந்தார் சங்கத்தின் மற்றொரு உறுப்பினரான விசாலாட்சி.

‘‘பெண்கள் பலர் பலவிதமான சிறுதொழிலில் ஈடுபட்டு வந்தாங்க. ஆனால் அவர்களால் பொருட்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான் விற்பனை செய்ய முடிந்தது. சரியான மார்க்கெட்டிங் ஸ்டாடர்ஜி தெரியவில்லை. அதனால் அவர்களின் வாடிக்கையாளர் வட்டம் மற்றும் தொழிலும் விரிவடையாமல் இருந்தது. அவர்களுக்கான ஒரு நெட்வொர்க் அமைத்து தர நினைத்தோம். அதன் அடிப்படையில்தான் 2019ல் முதல் சந்தையினை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்யாணம் மண்டபத்தில் துவங்கினோம்.

அதில் 50 பெண்கள் கலந்து கொண்டு தங்களின் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள். அடுத்த வருடம் கோவிட் என்பதால் இரண்டு வருடம் சந்தையினை ஆன்லைனில் நடத்தினோம். கோவிட் முடிந்து எல்லாம் சீரடைந்த பிறகு 2022 மற்றும் கடந்த ஆண்டு மீண்டும் சந்தையை நடத்தினோம். அதில் 90 பெண்கள் கலந்து கொண்டார்கள். இந்த வருடம் 150 பெண்கள் இந்த சந்தையில் தங்களின் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தனர். ஒவ்வொரு வருடமும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த சந்தை அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பதை உணர முடிகிறது’’ என்றவர், இந்த ஒருநாள் மட்டுமில்லாமல் சங்கம் மூலமாக இவர்களுக்கு வருடம் முழுதும் பல வகையில் உதவி செய்து வருவதாக குறிப்பிட்டார்.

‘‘பெண்கள் சிறு தொழிலில் ஈடுபட்டாலும் அவர்கள் அதில் பல பிரச்னைகளை சந்திப்பார்கள். ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக பிரச்னைகள் ஏற்படலாம். ஒரு சில பெண்கள் தொழிலில் சக்சஸ்ஃபுல்லாக இருப்பார்கள். ஆனால் குடும்பத்தில் சில சிக்கல்களை சந்திப்பார்கள். தொழில் மற்றும் குடும்பம் சார்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அவர்கள் எங்களை நாடி வந்தால் சங்கம் மூலமாக அதற்கான தீர்வினை ஏற்படுத்தி தருகிறோம்.

அதாவது, தொழிலில் பின்னடைவு ஏற்படும் போது அவர்களால் அதை கடந்து செல்ல முடியும் என்று ஊக்கமளிப்போம். அந்த துறையில் சாதித்தவர்களை நேரடியாக சந்திக்க வைத்து ஆலோசனை வழங்குவோம். அதுவே குடும்பத்தில் பிரச்னை இருந்தால் அதற்கு ஏற்ப கவுன்சிலிங் தருகிறோம். இதன் மூலம் பெண்கள் தங்களின் தொழில் மட்டுமில்லாமல் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை தைரியமாக சமாளிக்கிறார்கள்’’ என்றவர், சந்தையில் உள்ள ெபாருட்கள் குறித்து விவரித்தார்.

‘‘சந்தையைப் பொறுத்தவரை சென்னையில் செட்டிலான காரைக்குடி பெண்கள் மற்றும் காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டையில் சிறு தொழிலில் ஈடுபடும் பெண்களும் கலந்து கொண்டார்கள். இந்த சந்தை அமைக்க முதல் காரணம் பெண் தொழில்முனைவோரின் வளர்ச்சி. இரண்டாவது காரைக்குடியின் பாரம்பரியத்தை அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதனால்தான் இந்த சந்தையில் அந்த ஊரை சேர்ந்தவர்களுக்காக மட்டுமே நடத்துகிறோம்.

காரைக்குடியின் அடையாளம் அங்குள்ள வீடுகள். அதனை பென்சில் கொண்டு சித்திரமாக மட்டுமில்லாமல், அதனை கைப்பை, காலண்டர், கோஸ்டரில் பிரின்ட் செய்து தருகிறார். அடுத்து ஆத்தங்குடி டைல்ஸ். இதனை டைல்ஸாக மட்டுமில்லாமல், ஸ்டூல், டீபாய் போன்றவற்றிலும் அழகாக அமைத்து தந்திருந்தார் ஒருவர். வீடு, டைல்ஸ் வரிசையில் எங்களின் நகையும் குறிப்பாக பெண்கள் அணியும் தாலி வித்தியாசமாக இருக்கும். அதை கழுத்திரு என்று சொல்வார்கள். இரண்டு வரிசை சங்கிலி. முதல் வரிசை நடுவில் தாலியும் அடுத்த வரிசையில் லட்சுமி யந்திரம் இருக்கும். இதனை கல்யாணத்தின் போது மணமகன், மணப்பெண் கழுத்தில் அணிவார்.

அதன் பிறகு அவர்களின் 60 மற்றும் 80ம் திருமண நாளில் அணிவார்கள். மற்ற நாட்களில் இதையே சிறிய வடிவத்தில் செய்து அணிந்து கொள்வது வழக்கம். ஆண்கள் அணியும் அணிகலத்திற்கு பெயர் கவுரிசங்கரம். நாட்டுக்கோட்டை செட்டியார்கள்தான் இதனை பெரும்பாலும் அணிவார்கள். ருத்திராட்ச மாலையில் ரிஷப வாகனத்தில் சிவன்-பார்வதி அமர்ந்திருப்பது போல் டாலர் அமைக்கப்பட்டிருக்கும். இதனை ஆண்கள் தங்களின் 60 மற்றும் 80ம் திருமண நாளில் அணிவார்கள். இவை தவிர வைரம் மற்றும் தங்க நகைகள் விற்பனைக்கு இருந்தது.

சந்தையில் பெண்கள் பலரையும் கவர்ந்தது வீகன் பட்டுப்புடவை. பட்டுப்புழுவில் இருந்து பட்டு நூல் எடுப்பார்கள். அப்படி இல்லாமல் வாழை நார், தாமரை இலை, ஆலோவேரா வேரில் இருந்து எடுக்கப்படும் இழை கொண்டு இந்த பட்டுப்புடவையினை தயாரிக்கிறார்கள். இவை தவிர, தஞ்சாவூர் பெயின்டிங், காரைக்குடியின் ஸ்நாக்ஸ் வகைகள், உணவுகள் என அனைத்தும் சந்தையில் விற்பனையில் காண முடிந்தது. தற்போது சந்தை மூலம் அவர்களின் தொழிலில் வளர்ச்சி அடைவது மட்டுமில்லாமல் அடுத்தகட்டமாக மற்ற மாநிலங்களுக்கும் எக்ஸ்போர்ட் செய்யும் எண்ணமும் உள்ளது. அதற்கான வழிமுறைகளை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார் விசாலாட்சி.

தொகுப்பு: ரிதி

The post சென்னையில் களைகட்டிய காரைக்குடி பெண்களின் சந்தை! appeared first on Dinakaran.

Related Stories: