திருப்பூர், அக்.29: நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்கான பொருட்களை வாங்க கடந்த சில தினங்களாகவே பொதுமக்கள் கடை வீதிகளில் திரள தொடங்கினர். இருப்பினும் நேற்று முன்தினம் திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான போனஸ் தொகையினை பட்டுவாடா செய்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் கடைவீதிகளில் அதிகளவு பொதுமக்களின் கூட்டம் காணப்பட்டது.
நேற்று மதியத்திற்கு மேல் திருப்பூர் புதுமார்க்கெட் வீதி, குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது. இதன் காரணமாக நேற்றும் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் புதுமார்க்கெட் வீதிகளில் நடந்து சென்றும், உயர் கோபுரங்களில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூட்ட நெரிசலில் தங்கள் உடமைகளை மர்ம நபர்கள் திருடிச்செல்ல வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கவும் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுருத்தப்பட்டது. அதிகப்படியான பொதுமக்கள் கடை வீதி பகுதிகளுக்குள் வருவதால் போலீசார் சார்பில் வளர்மதி பாலம், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக வாகன பார்க்கிங் வசதி செய்துள்ளனர். இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ளதால் இன்றும் நாளையும் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post தீபாவளிக்கு 2 நாள் உள்ள நிலையில் கடை வீதியில் குறையாத மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.