இளம் வயது முடக்கு வாதம் தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

இயன்முறை மருத்துவர் நித்யா மூர்த்தி

‘எனக்கு வயசு 30 தான்… ஆனால், மூட்டு வலி தாங்க முடியலை’ என்று புலம்பும் இளம் வயதினர்களே அதிகமாக காணப்படுகின்றனர். முடக்குவாதம் என்றாலே முதியவர்களுக்கு மட்டும் வரும் நோய் என்ற பொதுவான எண்ணம் இன்றைய காலத்தில் மாறிவருகிறது. முந்தைய தலைமுறை மக்கள் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக வாழ்ந்து வந்ததால் அவர்களுக்கு மூட்டு மற்றும் எலும்பு தொடர்பான பிரச்னைகள் பெரும்பாலும் 50 வயதிற்குப் பிறகே தோன்றின.

ஆனால், இன்றைய இளம் தலைமுறை தற்போது பின்பற்றும் வாழ்வியல் முறையின் காரணமாக பல்வேறு நோய்களை இளம் வயதிலேயே எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முதல் மற்றும் முக்கிய காரணமாக அமைவது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கும் வாழ்வியல் அதாவது sedentary lifestyle என சொல்லப்படும் முறையே காரணமாக அமைகிறது.

இந்த வாழ்வியலின் விளைவாக இப்பொழுதெல்லாம் 20,30 வயதிலேயே உடல் பருமன் அதிகரிப்பு, மூட்டு வலி, முதுகு வலி, தசை இறுக்கம், காலை எழுந்தவுடன் தசை பிடிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேர்கிறது. இவையெல்லாம் ஒரே இரவில் வருவதல்ல. இவை நாளடைவில் அமைதியாக நம் வாழ்க்கைக்குள் நுழைகின்றன. வெளியில் ஆரோக்கியமாக தோன்றும் பல இளைஞர்கள் உள்ளே வலியோடு வாழ்கிறார்கள். இந்த நிலைக்கு வயது காரணம் அல்ல. வாழ்க்கை முறைதான் காரணம். அதிலும் இளைஞர்களுக்கு அதிக சிரமம் தருவது தொடர்ந்திருக்கும் மூட்டு வலிதான். ஏனெனில் அது நேரடியாக வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது.

முடக்கு வாதம் என்றால் என்ன?

எளிமையான வார்த்தைகளில் சொன்னால், நம் உடலில் தொடையிலிருந்து வரும் எலும்பும் காலில் இருந்து வரும் எலும்பும் இணையும் இடமே முழங்கால் மூட்டு என்பர். மூட்டுகளுக்குள் இருக்கும் மென்மையான திசுக்கள் மெதுவாக தேய்ந்து போவதாலும், அதனைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமாகவோ இறுக்கமாகவோ மாறுவதாலும் ஏற்படும் வலி மற்றும் இயக்கக் குறைபாடுகளையே முடக்கு வாதம் (Osteoarthritis) என்று கூறுகிறோம். இது ஒரே நாளில் வரும் நோய் அல்ல; காலப்போக்கில் உருவாகும் பிரச்னை என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

இளம் வயதில் வந்தால் இது ஆபத்தா?

*ஆபத்து இல்லை…

*ஆனால் அலட்சியம் ஆபத்தானது!

*ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முடக்கு வாதம் அதிகமாவதை கட்டுப்படுத்தலாம். சரியான உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் மூலம் வலி வராமல் தடுக்கலாம். அலட்சியமாக இருந்து விட்டால் 40, 45 வயதிலேயே இன்னும் வேகமாக முடக்கு வாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இதற்கான காரணங்கள் என்ன?

* இளம் வயதினருக்கு வரும் மூட்டு வலி நேரடியாக வாழ்வியலோடு தொடர்புடையது.

* இளம் வயதில் உடல் எடை அதிகரிப்பு,

* நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது,

* தவறான முறையில் உட்காருவது மற்றும் நிற்கும் பழக்கங்கள் (posture),

* பழைய காயங்களுக்கு சிகிச்சை எடுக்காமல் இருப்பது,

* விட்டமின் டி குறைபாடு,

* உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்களால் இளைஞர்களுக்கு மூட்டு வலி வருகிறது.

ஊட்டச்சத்து குறைபாடினால் முடக்குவாதம் வருமா?

முடக்கு வாதம் வருவதற்கு போஷாக்கு குறைபாடு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. ஜங் உணவுகள் மற்றும் சத்துக்கள் குறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதினால் கால்சியம், விட்டமின் டி போன்ற அத்தியாவசியமான சத்துக்கள் குறைகிறது. புரோட்டின் சத்து தசைகளை வலுப்படுத்துவதற்கும், கால்சியம் மற்றும் விட்டமின் டி சத்து எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இந்த சத்துள்ள உணவுகளை குறைவாக எடுத்துக்கொண்டால் அது நேரடியாகவே எலும்புகளையும் தசைகளையும் வலு இழக்க செய்யலாம். எனவே நாம் உண்ணும் உணவில் புரோட்டின் விட்டமின் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதே நன்று.

இதன் ஆரம்ப கால அறிகுறிகள்

காலையில் எழுந்தவுடன் மூட்டு வலி

மூட்டுகளை மடக்கி நீட்டும்போது கிளிக் அல்லது உராய்வு (கடக் கட) சத்தம் வருவது.

நீண்ட நேரம் உட்கார்ந்த பின் எழும்போது வலி ஏற்படுதல்

முழங்கால் மடக்குவதில் மாடிப்படி ஏறி இறங்கும் போது சிரமம் உண்டாதல்.

காலை நேரத்தில் மூட்டு மற்றும் தசைகள் இறுக்கமாக இருத்தல்

சில நேரங்களில் வலி அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் இருப்பது.

எப்போது கவனமாக இருக்க வேண்டும்?

இரண்டு மூன்று வாரங்களுக்கு மேலாக மூட்டு வலி, வீக்கம் மற்றும் தசை இறுக்கம், நடக்க முடியாத அளவுக்கு வலி இருந்தால்.., இது சாதாரண மூட்டு வலி இல்லை. உடனே அருகில் உள்ள மருத்துவர் அல்லது இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும்.

அறுவைசிகிச்சை தேவையா?

இளம் வயதில் பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவையில்லை.

இயன்முறை சிகிச்சைகள்

இயன்முறை மருத்துவம் வலியை குறைப்பதற்கும் அறுவைசிகிச்சை தள்ளி வைப்பதற்கும் மிக முக்கியம்.

ஆரம்பத்தில் வரும் மூட்டு வீக்கம், அதிக வலி இருக்கும்போது ஐஸ் பேக் 5 முதல் 10 நிமிடங்கள் வைக்கலாம்.

TENS/IFT/Ultrasound therapy – மருந்து இல்லாம வலியை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

மூட்டு அசைவு பயிற்சி- படுத்துக்கொண்டு முட்டியை மடக்கி நீட்டவும் இது மாதிரி பத்திலிருந்து பதினைந்து முறை பண்ணலாம்.

தசை பலப்படுத்தும் பயிற்சி – நாற்காலியில் அமர்ந்து முட்டியை நீட்டி பத்து நிமிடங்கள் அதே நிலையில் வைத்து பிடிப்பது,வலி இருந்தாலும் செய்யக்கூடிய (isometric exercise) – சிறிய துணி (டவல்) சுற்றி முட்டிக்கு அடியில் வைத்து 10 நிமிடங்கள் அழுத்தி பிடிக்கலாம்.

சரியான காலணிகளை தேர்வு செய்தல், ஹை ஹீல்ஸ் பயன்படுத்தக் கூடாது.

உடல் நிலைப்பாட்டை (posture) கவனமாக பராமரிப்பது.

நடை பயிற்சி மேற்கொள்வது தேவைப்பட்டால் முழங்கால் ஆதரவு பட்டை(Knee brace) பயன்படுத்தலாம்.

முடக்கு வாதத்தை எவ்வாறு தடுப்பது?

*முழுமையாக தடுக்க முடியாவிட்டாலும் அதிகமாவதை தாமதப்படுத்த கண்டிப்பாக முடியும்.
*தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி
*உடல் எடையை கட்டுக்கோப்பில் வைத்தல்
*தொடையை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துதல்
*தவறான (posture) தவிர்க்க வேண்டும்
*Squatting, kneeling அதிகமாக செய்ய வேண்டாம்.
*சரியான காலணிகளை பயன்படுத்துங்கள்.

முக்கிய குறிப்பு

“முடக்கு வாதம் வயதின் காரணம் அல்ல …

அன்றாட வாழ்க்கையின் பழக்க வழக்கங்களின் விளைவு”.

இளம் வயதிலேயே மூட்டு வலி வந்தால் அதை அலட்சியம் செய்யாமல் சரியான நேரத்தில் அருகில் இருக்கும் மருத்துவரையோ அல்லது இயன்முறை மருத்துவரையோ அணுகவும்.

Related Stories: