×

அம்ரூத் 2.0 திட்டத்தில் தேர்வு: தமிழகத்தில் ஹைடெக்காக மாறபோகும் 42 நகரங்கள்; மாஸ்டர் பிளான் தயாரிக்க 4 நிறுவனங்களுக்கு அனுமதி

நகர்ப்புறங்களை புதுப்பிக்கும் நோக்கத்துடன் ஒன்றிய அரசின் சார்பில் அம்ரூத் திட்டம் 2015 ஜூன் மாதம் துவங்கப்பட்டது. ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வசதி, கழிவுநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் மேலாண்மை, மழைநீர் வடிகால், மோட்டார் பொருத்தப்படாத போக்குவரத்து, பசுமை பூங்காக்கள் மற்றும் பசுமையான இடங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் உறுதி செய்யப்படும்.

முதல்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உடைய மற்றும் மத, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த 550 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஒதுக்கப்பட்டது. இதில் மாநில செயல் திட்டங்களுக்கு ரூ.77,640 கோடி மதிப்பிலான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் 26 நகரங்களும், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் ஆகிய மத சுற்றுலா நகரங்களும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் அம்ரூத் திட்டமானது அம்ரூத் 2.0 என்ற பெயருடன் 2021, அக்டோபரில் நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்தில் இந்தியாவில் 500 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் 57 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் மலைப்பாங்கான நகரங்கள் தவிர்த்து 42 நகரங்களுக்கு முதல்கட்டமாக மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கு தமிழ்நாடு அரசு நகர திட்டமிடல் இயக்குனரகமான டிடிசிபி.க்கு ஆணை வழங்கி உள்ளது. டிடிசிபி.க்கு உறுதுணையாக திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ஏஆர்பி கன்சல்டன்சி உள்ளிட்ட 4 ஆலோசனை நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கி ரூ.32 கோடி அனுமதித்துள்ளது.

மொத்த பரப்பளவு சுமார் 3,647 சதுர கி.மீ. திட்ட அறிக்கை தயாரிக்கும் ஆலோசனை நிறுவனங்கள் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துடன் இணைந்து செயல்படும். இதற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அம்ரூத் திட்டத்தில் தமிழகத்தில் ஏற்கனவே 28 நகரங்களில் ரூ.14,687.83 கோடி செலவிலான 1,270 பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 952 திட்டங்களுக்கு ரூ.10,228.59 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 318 திட்டங்களுக்கு ரூ.4,459 கோடி டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள விருதுநகர் மாவட்ட நகர் ஊரமைப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘‘விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய நகரங்கள் அம்ரூத் 2.0 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இந்த நகரங்களை ஒட்டிய பகுதிகளில் எந்தந்த பகுதியை சேர்க்கலாம் என திட்ட அறிக்கை தயாரிக்கும் நிறுவனம் கிராம வரைபடம், எப்எம்பி எனப்படும் புல அளவீட்டு புத்தகம், புல வரைபடம், அடங்கல், அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள் விபரம் உள்ளிட்ட தகவல்களை கோரி பெற்றுள்ளது.

நாட்டில் நகர பெருந்திட்டத்தை 1920ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். ஏற்கனவே செய்துவரும் பணியை அம்ரூத் 2.0 திட்டத்தில் கொண்டு வந்துள்ளனர். அடுத்த 20 ஆண்டுகளில் நகரமைப்பை மேம்படுத்தும் திட்ட வரைபடம் தயாரிக்கப்படும். இதற்கு தற்போது மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துடன் 4 ஆலோசனை நிறுவனங்கள் இணைந்து செயல்படும். 20 ஆண்டுகளுக்கு பின் ஒரு நகரம் சிறப்பாக செயல்படும் வகையில் மாற்றி அமைக்க மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும். அம்ரூத் 2.0 திட்டத்தில் நகர அடிப்படை கட்டமைப்பு, சாலைகள் அமைப்பு, மின்சாரம் பூமிக்கடியில் கொண்டு செல்லப்படும்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் மேம்பாலங்கள், தரைமட்ட பாலங்கள், நீர் நிலைகள் பராமரிப்பு, பசுமை பூங்கா, கழிவு, கழிவுநீர் மேலாண்மை, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அனைத்தும் நகரங்களில் கொண்டு வரும் வகையிலும், ஹைடெக்காக மாற்றும் வகையிலும் திட்டமிட்டு அறிக்கை தயாரிக்கப்படும். திட்ட அறிக்கைக்கு பிற்பாடு திட்ட செலவினத்தில் ஒன்றிய அரசு, மாநில அரசு 90:10 சதவிகிதத்தில் வழங்கும். அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் வகையில் பணிகள் திட்டமிடப்படும்’’ என தெரிவித்தனர்.

* அம்ரூத் திட்டத்தில் நாடு முழுவதும் 500 நகரங்கள் தேர்வு
* தமிழ்நாட்டில் 57 நகரங்கள் தேர்வு
* முதல்கட்டமாக 42 நகரங்களுக்கு மாஸ்டர் பிளான்

* சிறிய நகரங்களில் அடிப்படை கட்டமைப்புகளை முழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு ‘அம்ரூத்’ என்ற திட்டத்தை தொடங்கியது.
* அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.100 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது என தெரிகிறது.

* அம்ரூத் முதல்கட்ட திட்ட நகரங்கள்
தமிழ்நாட்டில் அம்ரூத் முதல்கட்ட திட்ட பணிகள் நடைபெறும் 28 நகரங்களை பார்ப்போம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், ஈரோடு, ஓசூர், வேலூர், திண்டுக்கல், வேளாங்கண்ணி, நாகர்கோவில், ஆவடி, பல்லவபுரம், தாம்பரம், கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கும்பகோணம், ராஜபாளையம், புதுக்கோட்டை, ஆம்பூர், காரைக்குடி, நாகப்பட்டினம், ராமேஸ்வரம்.

* அம்ரூத் 2.0 திட்டத்தில் தேர்வான நகரங்கள்
அம்ரூத் 2.0 திட்டத்தில் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 57 நகரங்கள்:
விருதுநகர்
அருப்புக்கோட்டை
சிவகாசி
திருத்தங்கல்
ஸ்ரீவில்லிபுத்தூர்
பரமக்குடி
ராமநாதபுரம்
தேவகோட்டை
போடி
கம்பம்
தேனி அல்லிநகரம்
பழநி
மேட்டுப்பாளையம்
பொள்ளாச்சி
வால்பாறை
சிதம்பரம்
பண்ருட்டி
விருத்தாச்சலம்
தர்மபுரி
கோபிசெட்டிபாளையம்
செங்கல்பட்டு மறைமலைநகர்
கரூர்
இனாம்கரூர்
தாந்தோணி
கிருஷ்ணகிரி
மயிலாடுதுறை
குமாரபாளையம்
நாமக்கல்
ராசிபுரம்
திருச்செங்கோடு
அட்டூர்
எடப்பாடி
மேட்டூர்
புதுக்கோட்டை
ஊட்டி
திருவள்ளூர்
மன்னார்குடி
திருவாரூர்
கோவில்பட்டி
கடையநல்லூர்
புளியங்குடி
சங்கரன்கோவில்
தென்காசி
தாராபுரம்
உடுமலைப்பேட்டை
ஆரணி
அரக்கோணம்
ஆற்காடு
குடியாத்தம்
பேரணாம்பட்டு
ராணிபேட்டை
திருப்பத்தூர்
வாணியம்பாடி
கள்ளக்குறிச்சி
திண்டிவனம்
விழுப்புரம்.
இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் செயல்படுத்த அனுமதிக்கப்பட்ட 57 நகரங்களில், மலைப்பாங்கான பகுதி நகரங்களை தவிர்த்து 42 நகரங்களில் திட்டத்தை செயல்படுத்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படுகிறது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட 15 நகரங்களில் பிரத்யேக ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

The post அம்ரூத் 2.0 திட்டத்தில் தேர்வு: தமிழகத்தில் ஹைடெக்காக மாறபோகும் 42 நகரங்கள்; மாஸ்டர் பிளான் தயாரிக்க 4 நிறுவனங்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Amruth ,Union Government ,Union Ministry of Housing and Urban Affairs ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை...