×
Saravana Stores

100 போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது இஸ்ரேல் குண்டு மழை: ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல்; 25 நாட்களுக்குப் பின் பதிலடி கொடுத்ததால் பதற்றம்

டெல் அவிவ்: ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து 100 போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறி உள்ளது. கடந்த 1979ம் ஆண்டில் ஈரானிய புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்தே ஈரானும், இஸ்ரேலும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. இஸ்ரேலை அழிக்க வேண்டுமென ஈரான் நாட்டு தலைவர்கள் வெளிப்படையாக பேசினர்.

அதோடு, இஸ்ரேலுக்கு எதிரான போராளி குழுக்களை ஈரான் ஆதரித்தது. இதனால் ஈரானை எப்போதுமே தனது அச்சுறுத்தலாகவே கருதிய இஸ்ரேல் நிழல் உலக யுத்தத்தை நடத்தியது. ஈரான் அணு விஞ்ஞானிகளை கடத்தி கொலை செய்தது. ஈரான் அணுசக்தி மையங்களை ஹேக் செய்து நாசப்படுத்தியது. பல ஆண்டாக நடந்த இந்த நிழல் யுத்தம், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் புகுந்து கொடூரத தாக்குதல் நடத்தியதால் காசா மீது இஸ்ரேல் படையெடுத்ததில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது. காசாவின் ஹமாஸ் போராளிகளும், லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளும் ஈரானின் ஆதரவில் செயல்படுபவர்கள்.

ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்ததும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலை தாக்கத் தொடங்கியது. இதனால் ஒரே நேரத்தில் காசா, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. அதோடு ஈரானையும் மறைமுகமாக பழிவாங்கியது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், ஏப்ரல் 13ம் தேதி 300 ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இது இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் வெளிப்படையாக நடத்திய முதல் தாக்குதல்.

இதற்காக ஈரானை நேரடியாக தாக்காத இஸ்ரேல், ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்களை பழிவாங்கியது. கடந்த ஜூலை 31ல் ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றிருந்த ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவை வான்வழி தாக்குதல் நடத்தி கொன்றது. கடந்த செப்டம்பரில், லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகள் மீது வான்வழி தாக்குதலை தீவிரமாக்கி ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவையும் படுகொலை செய்தது. தரைவழியாகவும் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது.

இது ஈரானுக்கு மேலும் ஆத்திரமூட்டியதால், கடந்த அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேல் மீது 2வது முறையாக தாக்குதல் நடத்தியது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல் வானிலேயே இடைமறித்து அழித்ததாக கூறியது. இந்த தாக்குதல் மூலம் ஈரான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், இதற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்தார்.

ஈரான்-இஸ்ரேல் போர் மூண்டால் அது உலக யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதால் மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுத்து இஸ்ரேலை அமைதிப்படுத்தின. ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள், எண்ணெய் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என அமெரிக்க அதிபர் பைடன் உறுதி அளித்தார். ஆனாலும், ஈரானுக்கு பதிலடி தருவதில் இஸ்ரேல் உறுதியாக இருந்ததால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில், 25 நாட்களுக்குப் பிறகு ஈரான் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. நேற்று அதிகாலை சுமார் 2000 கிமீ தொலைவில் உள்ள ஈரான் தலைநகர் டெஹ்ரான் நோக்கி 100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் போர் விமானங்கள் பறந்தன.

அவை ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டு மழை பொழிந்தன. இதனால், தலைநகர் டெஹ்ரானில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் ஈரானில் பெரும் பதற்றம் நிலவியது. உடனடியாக ஈரான் வான் எல்லை மூடப்பட்டது. மறுஉத்தரவு வரும் வரை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டன. காலையில் விடியும் வரை இந்த தாக்குதல் தொடர்ந்தது. பின்னர் ஈரான் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

இந்த தாக்குதல் குறித்து டெல் அவிவ்வில் பேட்டி அளித்த இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி, ‘‘இஸ்ரேல் மீது ஈரான் 2 முறை தாக்குதல் நடத்தி உள்ளது. அதுவும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியையும் குறிவைத்து தாக்கி உள்ளது. அதற்கான விலையை கொடுத்துள்ளது. நாங்கள் காசா, லெபனானில் மட்டுமே எங்கள் போரில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் ஈரான் அப்போரை விரிவுபடுத்த விரும்புகிறது. எங்கள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரும் உரிமை எங்களுக்கு உண்டு. நாங்கள் அவர்களின் ராணுவ நிலைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவிய இடங்கள், ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளோம். இதற்கு எதிர் தாக்குதலை ஈரான் நடத்தினால், மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம்’’ என கூறினார்.

அதே சமயம், ஈரான் ராணுவம் ஏவுகணை அழிப்பு அமைப்புகளை பயன்படுத்தி வானிலேயே குண்டுகளை தகர்த்ததாக கூறியது. இஸ்ரேலின் தாக்குதலில் குறைந்தபட்ச பாதிப்பு மட்டுமே ஏற்பட்டதாக தகவல் வெளியிட்டது. இலாம், குஷெஸ்தான், டெஹ்ரான் மாகாணங்களில் தாக்குதல் நடந்ததாகவும், இதில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஈரான் உறுதி செய்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில், ‘‘இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐநா சாசனத்தின் அப்பட்டமான மீறல். ஐநா சாசனத்தின் 51வது பிரிவின்படி, தற்காப்புக்கான முழு உரிமையும், பதிலளிக்க வேண்டிய கடமையும் ஈரானுக்கு உள்ளது. எனவே இஸ்ரேலுக்கு நிச்சயம் பதிலடி தரப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இஸ்ரேல் நடத்தி வரும் போரால் காசாவில் 42,000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டில் 90 சதவீதம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். வடக்கு காசாவில் எஞ்சிய அத்தனை பேரும் சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். லெபனானில் 2,600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 4 லட்சம் குழந்தைகள் இடம் பெயர்ந்துள்ளனர். காசாவும், லெபனானும் போரின் கொடூர பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் ஈரான், இஸ்ரேல் இடையேயான நேரடி தாக்குதல் மத்திய கிழக்கில் மேலும் போர் விரிவடையும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.

* உலக நாடுகள் கண்டனம்
ஈரான் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஓமன், மலேசியா, இங்கிலாந்து, கத்தார், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

* இத்தோடு நிறுத்துங்க: அமெரிக்கா அறிவுரை
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், தாக்குதல் நடத்துவதற்கு முன்பே இஸ்ரேல் இது குறித்து தெரிவித்ததாக கூறியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது. வெள்ளை மாளிகையில் உயர் அதிகாரி அளித்த பேட்டியில், ‘‘இஸ்ரேலும், ஈரானும் நேரடி மோதலை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இஸ்ரேல் தனது தற்காப்புக்காக இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இனியும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால் அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்’’ என எச்சரித்துள்ளார். இதே போல ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் ஈரான் அமைதி காக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளன.

* ஈரான் ரேடார்களை மீறி இஸ்ரேல் தாக்கியது எப்படி?
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலின் போது ஈரான் தரையிலிருந்து இலக்கை தாக்கும் ஏவுகணைகளை ஏவியது. ஆனால் இஸ்ரேலோ தனது போர் விமானங்களை ஈரான் வான்வெளிக்கும் பறக்கவிட்டு குண்டுவீசி உள்ளது. இதன் மூலம் ஈரானில் எங்கு வேண்டுமானாலும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது. 2000 கிமீ அப்பாலில் இருந்து இஸ்ரேல் போர் விமானங்கள் வருவதை ஈரானால் முன்கூட்டியே அறிய முடியவில்லை. இதற்காக எப்-35 உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. முதலில் அதிகாலை 2 மணி அளவில் சிரியாவின் டமாஸ்கஸ் உள்ளிட்ட இடங்களில் ராணுவ நிலைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலை தடுக்க தனது கவசமாக சிரியாவை ஈரான் வைத்திருந்தது. ஆனால் சிரியாவின் ரேடார்களை அழித்து, ஈரானை குருடாக்கிய இஸ்ரேல் டெஹ்ரானிலும் குண்டுமழை பொழிந்து வெற்றிகரமாக திரும்பியது. இதிலும், அணு உலை, எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இஸ்ரேல் துல்லியமாக தவிர்த்துள்ளது.

* ஈரானில் 10 போலீஸ் அதிகாரிகள் பலி
இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 1200 கிமீ தொலைவில் உள்ள சிஸ்தன் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்தின் கோஹர் குஹ் எனும் பகுதியில் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 அதிகாரிகள் பலியாகி உள்ளனர். வாகனங்கள் மீது குண்டு வீசப்படவில்லை என்றும் துப்பாக்கி சூட்டில் 10 அதிகாரிகள் பலியாகி இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இத்தாக்குதலை யார் நடத்தியது என்பதை வெளியிடவில்லை.

The post 100 போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது இஸ்ரேல் குண்டு மழை: ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல்; 25 நாட்களுக்குப் பின் பதிலடி கொடுத்ததால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில்...