×
Saravana Stores

தொடர் மழையால் திருமூர்த்தி அணை நிரம்புகிறது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை: திருமூர்த்தி அணை முழு கொள்ளளவை நெருங்கிய நிலையில்,பாலாற்றில் உபரி நீர் திறப்பதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கோவை,திருப்பூர் மாவட்டங்களின் முக்கிய பாசன ஆதாரமாக திருமூர்த்தி அணை உள்ளது. மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையானது பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட மண் அணையாகும். இதன் மூலம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பிஏபி தொகுப்பணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீர் மற்றும் பாலாற்றின் மூலம் பெறப்படும் தண்ணீர் திருமூர்த்தி அணையில் இருப்பு வைக்கப்பட்டு பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால்,அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 56.71 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 856 கன அடியாக உள்ளது. இதனால் விரைவில் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி அணையிலிருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் பாலாற்றின் வழியாக திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே பாலாற்றின் கரையோர கிராமங்களான ஜிலேப்பநாய்க்கன்பாளையம், அர்த்தநாரிபாளையம், ராவணாபுரம், தேவனூர்புதூர் உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றில் குளித்தல்,துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களை தவிர்ப்பது நல்லது. மேலும் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்வது நல்லது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தொடர் மழையால் திருமூர்த்தி அணை நிரம்புகிறது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirumurthy dam ,Udumalai ,Thirumurthy Dam ,Coimbatore ,Tirupur ,Dinakaran ,
× RELATED தொடர் கனமழை காரணமாக வேகமாக நிரம்பும்...