×
Saravana Stores

கோரிக்கை தொடர்பாக வழக்கு தொடரும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை கூடாது: சிறைத்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: தேசிய புலனாய்வு முகமை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ்வர் பெருமாள் என்பவரின் மனைவி சுஜாதா,தனது கணவரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2 ஆயிரம் கைதிகளை மட்டும் அடைக்கக் கூடிய புழல் சிறையில் 3,600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 60 கைதிகளுக்கு ஒரு கழிப்பிட வசதி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஆரோக்கிய குறைபாடு நிலவுகிறது. அதன் காரணமாக தனது கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரை நெரிசல் இல்லாத, ஆரோக்கியமான முறையில் பராமரிக்கப்படும் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறைகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். 60 கைதிகளுக்கு ஒரு கழிவறை மட்டுமே வழங்குவது எப்படி முறையாக இருக்கும். வண்டலூரில் கூட விலங்குகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த கைதிகளை சிறை அதிகாரிகள் என்ன செய்வார்கள் என்பது தெரியும். இதுபோல வழக்கு தொடரும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது. இந்த மனுவுக்கு அரசு தரப்பு பதில் தரவேண்டும். சிறையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

The post கோரிக்கை தொடர்பாக வழக்கு தொடரும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை கூடாது: சிறைத்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sujatha ,Vigneshwar Perumal ,National Investigation Agency ,Puzhal Jail ,Madras High Court ,
× RELATED கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாய் பலி, மகளை தேடும் பணி தீவிரம்