×
Saravana Stores

தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: ஐகோர்ட் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்கறிஞர்கள் காலியிடத்தை நிரப்பக் கோரிய மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். முந்தைய விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் காலியாக இருந்தால், குற்றவியல் நீதி பரிபாலனம் முடங்கும் நிலை ஏற்படும். எனவே, காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் அறிக்கையளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகம்மது ஜின்னா ஆஜராகி, ‘‘ஐகோர்ட் கிளை உத்தரவின்படி, காலியாக இருந்த 14 அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காலியாக உள்ள 5 குற்றவியல் துறை துணை இயக்குநர் பணியிடங்களும் 2003ம் ஆண்டின் அரசு விதிகளின்படி நிரப்பத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘நீதிமன்ற உத்தரவை ஏற்று, குறுகிய காலத்திற்குள் குற்றவியல் வழக்கறிஞர் காலியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகம்மது ஜின்னாவிற்கும் பாராட்டுகள். துணை இயக்குநர் பதவி உயர்வினால் ஏற்படும் காலியிடங்களையும் ஒரு மாதத்திற்குள் நிரப்புவது குறித்து அரசிடம் விளக்கத்தை பெற்று தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Tamil Nadu Govt. ,Madurai ,Justice ,KK Ramakrishnan ,
× RELATED தவறான உறுதிமொழி தாக்கல் செய்வதை...