×

வண்ண வண்ணப் பூக்களாக மாறும் பட்டாசுகள் !

நன்றி குங்குமம் தோழி

“அன்று தீபாவளி. எங்கள் கிராமத்தினர் அனைவரும் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்தனர். நான் எங்க ஆர்ட் ஸ்டூடியோவின் முன்னிருந்த வேப்ப மரத்தில் அமர்ந்திருந்த சிட்டுக்குருவிகளை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென சிட்டுக்குருவிகள் எல்லாம் மிரண்டு போய் இறக்கைகளை படபடவென அடித்துக்கொண்டு பறந்தன. காரணம், பயங்கர பட்டாசு வெடி சத்தம்தான். அப்போது தோன்றிய எண்ணம் தான் இந்த விதை பட்டாசுகள்” என்கிறார் கிராம் ஆர்ட் ப்ராஜெக்ட் (Gram Art Project) என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்வேதா பட்டாட்.

பற்ற வைத்ததும் வெடித்துச் சிதறி காற்று மண்டலத்தில் மாசுவாகவும் நிலத்தில் குப்பைகளாகவும் வந்து சேரும் பட்டாசுகளை பார்த்திருப்பீர்கள். உள்ளிருக்கும் விதைகள் வெடித்து முளைத்து செடிகளாக வளர்ந்து நிலமே பசுமையாக மாறும் பட்டாசுகளை நீங்கள் பார்த்ததுண்டா? இப்படி நம்மை ஆச்சர்யப்பட வைக்குமளவு விதைகளை கொண்ட பட்டாசுகளை தயாரித்து வருகிறது இந்த அமைப்பு. இந்த வினோதமான விதை பட்டாசுகளின் தயாரிப்பை பற்றி விளக்குகிறார் ஸ்வேதா பட்டாட்.“எங்க ஸ்டூடியோ முன்னிருக்கும் அந்த வேப்ப மரங்களில் எப்போதும் ஆயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் வந்து அமரும். நாங்கள் அனைவரும் அவற்றை எப்போதும் ரசித்துக்கொண்டிருப்போம்.

கூட்டம் கூட்டமாக அவற்றை பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கும். ஆனால் தீபாவளி கொண்டாட்டத்தின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளின் சத்தத்தினால் அவை மட்டு மில்லாமல் நாய் போன்ற உயிரினங்களும் மிரண்டு போய்விடுகின்றன. நிறைய பறவைகள் பதட்டத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்துவிடும். நாம் கொண்டாட்டத்திற்காக வெடிக்கின்ற பட்டாசுகளால் பறவைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எல்லோரிடமும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்காமல், எந்த உயிரினத்திற்கும் தீங்கு ஏற்படுத்தாத வகையில் பட்டாசுகளை தயார் செய்து, அதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று தோன்றியது. அதை செயல் வடிவமாக்கும் முயற்சியாகத்தான் இந்த விதை பட்டாசுகளை தயாரித்தோம்.

பொதுவாக வெடிக்கும் பட்டாசுகளின் உள்ளே வெடி மருந்துகளைதான் வைப்பார்கள். ஆனால் நாங்கள் விதைகளை உள்ளே வைத்து பட்டாசு களை தயார் செய்கிறோம். விதைகளை கொண்டு தயார் செய்யப்படும் இந்த பட்டாசுகள் சத்தம் போட்டு வெடிப்பதில்லை. ஆனால் விதைகள் சத்தமில்லாமல் பிளவுற்றுச் செடியாக முளைக்கின்றன. அவை இந்த நிலத்தை பசுமையாக மாற்றுகின்றன. இந்த விதை பட்டாசுகள் அதிக சத்தத்தை எழுப்பி பறவைகளை பயமுறுத்துவதில்லை. அவையே பறவைகள் வந்தமரும் மரங்களாக வளருகின்றன. சாதாரண பட்டாசுகளை போல இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக இவை ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குகின்றன.

பட்டாசுகளை வெடித்து அதிலிருந்து வருகின்ற சத்தமும் கண்கவர் வண்ணமும் கண நேர சந்தோஷத்தை தான் நமக்கு தரும். ஆனால் இது போன்ற விதை பட்டாசுகளை விதைப்பதில் தொடங்கி அவை செடியாக முளைத்து வளர்ந்து பார்க்கும் போது அளவில்லாத சந்தோஷத்தை தரும். நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றை தருவது மரங்கள்தான். இதை எல்லோரிடமும் விழிப்புணர்வாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கம். இந்த விதை பட்டாசுகளை அப்படியே மண்ணில் புதைத்து அவற்றில் தண்ணீர் ஊற்ற வேண்டும். சில நாட்களில் பட்டாசுகளில் இருக்கும் விதைகள் முளைத்து வளரும். அதன்பின்னர் நீங்கள் அதை பராமரித்துக் கொள்ளலாம்” என்றவர் அமைப்பினை தொடங்கியதின் நோக்கத்தை பகிர்ந்தார்.

“மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பரத்சிங்கா என்பதுதான் எங்கள் கிராமம். என் அப்பா ஒரு விவசாயி. சிறுவயதிலிருந்தே நான் விவசாயத்தை பார்த்து வளர்ந்தவள். ஃபைன் ஆர்ட்ஸ் படித்து ஒரு ஆர்டிஸ்ட்டாக இருந்தேன். எங்கள் கிராமத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் குறைவு. சிறுவயது திருமணம், அடிமைத்தனம் போன்ற பிற்போக்குகள் இங்கு அதிகம். எங்கள் கிராம மக்கள் விவசாயத்தையே சார்ந்திருந்தனர். ஆனால் நில அபகரிப்புகள் மற்றும் இயற்கை சேதங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பருத்தி விவசாயமும் தாராளமாக எல்லோராலும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இங்கு ஒற்றைப்பயிர் சாகுபடி மட்டுமே செய்வார்கள். இதையே பல பயிர் சாகுபடி செய்தால் எங்கள் கிராம மக்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். இது போன்ற பிரச்னைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கும்போது எனக்கிருந்த கலை ஆர்வத்தையே இதற்கு ஆயுதமாக பயன்படுத்தினேன்.

ஒரு ஆர்டிஸ்ட்டாககேலரிகளை உருவாக்குவது மட்டுமில்லாமல் மக்களின் பிரச்னைகளை கண்டறிந்து அதனை என் கலை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தேன். என்னை சுற்றியிருக்கும் கலைஞர்கள், விவசாயிகள், பெண்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஒரு ஆர்ட் ஸ்டூடியோவை உருவாக்கினோம். அதில் அனைவரும் இணைந்து முதலில் விதை திருவிழா ஒன்றை நடத்தினோம். ஒற்றைப் பயிர் சாகுபடியை தாண்டி பல பயிர் சாகுபடியும் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விதை திருவிழா அமைந்தது. கலை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் விதைகளை கொண்ட கைவினைப்பொருட்களை இயற்கை முறையில் தயாரித்தோம்.

இயற்கையான நிறங்களை பயன்படுத்தினோம். கைவினைப் பொருட்களை தயாரிப்பதில் பருத்தி நூல், காகிதங்கள் போன்றவற்றை பயன்படுத்தினோம். ஆரம்பத்தில் விதைகளை உள்ளே வைத்து தயாரிக்கப்படும் சீட் பேண்டுகளை அறிமுகப்படுத்தினோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. எல்லா விழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் நாங்கள் விதைகளை கொண்ட சீட் பேண்டுகளை தயார் செய்து தருவோம். சீட் பேண்டுகளை கையில் கட்டிப் பார்த்து மகிழ்ந்துவிட்டு பின்னர் இதை அப்படியே மண்ணில் விட்டு நீரூற்றினால், அதிலிருக்கும் விதைகள் முளைத்து செடியாக வளரும். சீசனிற்கு தகுந்த விதைகளை பயன்படுத்தினோம்.

இது போல் பல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆரம்பத்தில் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு பயந்துதான் அமைப்பில் வேலை செய்ய பெண்கள் வருவார்கள். கொரோனா தொற்று காலத்தில் இந்த வேலை அவர்களுக்கு உதவிகரமானதாக இருந்ததால், இப்போது ஆண்களே பெண்களை வேலைக்கு செல்ல அனுமதிக்கிறார்கள். இதுவே எங்க கிராமத்தில் பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. ஆனாலும் சில கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. எங்களின் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் சிரமங்கள் இருந்தது. இருப்பினும் இது போன்ற சவால்களை எதிர்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கம்’’ என்றவர் விதை பட்டாசுகள் குறித்து பேசினார்.

‘‘விதை பட்டாசுகளை சாதாரண பட்டாசுகளின் தோற்றத்திலேயே உருவாக்குகிறோம். இந்த விதை பட்டாசுகள் முற்றிலும் கைவினையாகவும் இயற்கை முறையிலும் தயார் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பட்டாசுக்குள்ளும் ஒரு செடியின் விதைகளை வைத்திருக்கிறோம். ராக்கெட் பட்டாசுக்குள் வெள்ளரி விதை. வெள்ளரி கொடி வளர சப்போர்ட்தேவை என்பதால், ராக்கெட் பட்டாசின் குச்சி வெள்ளரி கொடி வளர உதவும். சங்கு சக்கரத்தில் வெங்காயமும், பிஜிலிக்குள் மைக்ரோ-கிரீன்ஸ் விதைகளும், ஆட்டோ பாம் உள்ளே ரோசெல்லே செடி விதையும், புஸ்வாணத்திற்குள் அகத்தி விதையும், லக்ஷ்மி வெடிக்குள் வெண்டைக்காய் விதைகளும், பொட்டு வெடியினுள் வெந்தயமும், சாட்டையினுள் சாமந்தி மற்றும் கத்தரிக்காய் விதைகள் என பட்டாசுகளின் வடிவங்களுக்கு ஏற்ப செடிகளின் விதைகளை வைத்திருக்கிறோம். செடிகளில் இருந்து வண்ணப் பூக்கள் பூத்து வெளிவருகையில் பார்ப்பதற்கு பட்டாசுகளிலிருந்து வெளிவரும் தீப்பொறிகள் போல இருக்கும். கண நேர தீப்பொறிகளை விட, இந்தச் செடிகள் நீண்ட கால மகிழ்ச்சியையும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் நமக்குத் தரும்” என்றார் ஸ்வேதா பட்டாட்.

தொகுப்பு:ரம்யா ரங்கநாதன்

The post வண்ண வண்ணப் பூக்களாக மாறும் பட்டாசுகள் ! appeared first on Dinakaran.

Tags : Diwali ,
× RELATED மீனாட்சி படம் திருட்டு கதையா?