×
Saravana Stores

ஆர்டிஓ சோதனைச்சாவடியில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு * மோட்டர் வாகன ஆய்வாளரின் ராணிப்பேட்டை வீட்டிலும் சோதனை * கணக்கில் வராத ₹5.84 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் காட்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள

வேலூர், அக்.24: காட்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள ஆர்டிஓ சோதனைச்சாவடியிலும், தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளரின் ராணிப்பேட்டை வீட்டிலும் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ₹5.84 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பலர் அதிகளவு லஞ்சம் வசூலிக்க தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை கையும் களவுமாக பிடித்து வருகின்றனர். இதனால் லஞ்சம் வாங்குபவர்கள் அச்சமடைந்தாலும், சிலர் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக- ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள ஆர்டிஓ சோதனைச்சாவடியில் வாகனங்களில் விதிகளை மீறி கொண்டு வரப்படும் சரக்குகள், வாகனங்களின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் என பல்வேறு நிலைகளில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவு லஞ்சம் வசூலிப்பதாக விஜிலென்ஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மைதிலி, எஸ்ஐ இளவரசன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள ஆர்டிஓ சோதனைச்சாவடியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசுக்கு வர வேண்டிய வருவாய் தவிர்த்து, கணக்கில் வராத ₹1 லட்சத்து 38 ஆயிரத்து 900 ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் தேவிஜெயந்தி மற்றும் அலுவலக உதவியாளர் மற்றும் தனிநபர்கள் 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து டிஎஸ்பி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் தேவிஜெயந்தி வீட்டில் சோதனையை தொடங்கினர். இதில் கணக்கில் வராத ₹4 லட்சத்து 45 ஆயிரத்து 900 ரொக்கப்பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காட்பாடி சோதனைச்சாவடி மற்றும் ராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் வீடு ஆகிய 2 இடங்களில் மொத்தம் ₹5.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது, ‘எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் நேற்று அதிகாலை சோதனை நடத்தினோம். இதில் கணக்கில் வராத ₹1 லட்சத்து 38 ஆயிரத்து 900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மோட்டர் வாகன ஆய்வாளர் தேவிஜெயந்தி வீட்டில் ₹4 லட்சத்து 45 ஆயிரத்து 900 மற்றும் 6 சொத்து ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளோம்’ என்றனர்.

The post ஆர்டிஓ சோதனைச்சாவடியில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு * மோட்டர் வாகன ஆய்வாளரின் ராணிப்பேட்டை வீட்டிலும் சோதனை * கணக்கில் வராத ₹5.84 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் காட்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள appeared first on Dinakaran.

Tags : RTO ,Ranipet ,Katpadi ,Tamil Nadu-Andhra border ,Vellore ,Vigilance ,Christianpettai ,Gadpadi ,Tamil Nadu-Andhra Pradesh border ,Dinakaran ,
× RELATED மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில்...