×
Saravana Stores

போலி என்சிசி முகாம் மூலம் பாலியல் தொல்லை 4 பள்ளிகள் மீதான வழக்குகளில் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல்: சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்; பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு ரூ.1 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு

சென்னை: போலி என்.சி.சி.முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளிலும் இடைக்கால குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 4 பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 3 வழக்குகளிலும் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு பள்ளிக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 3 பள்ளிகளுக்கும் ஒரு வாரத்தில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் அந்த பள்ளிகள் கொண்டுவரப்படும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 1.63 கோடி ரூபாய் கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

சிவராமன், பள்ளி மாணவிகளை அவரது அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை அளித்ததும் மாமல்லபுரம், கொடைக்கானல் மற்றும் மைசூரு, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடைபெற்றது முதல் தற்போது வரையிலான விசாரணையின் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும். நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் விசாரணை இருக்கும் என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. இந்த 4 பள்ளிகளிலும் போலி என்.சி.சி. முகாம் எப்படி நடத்தப்பட்டது? என்ன உள்நோக்கம் என்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post போலி என்சிசி முகாம் மூலம் பாலியல் தொல்லை 4 பள்ளிகள் மீதான வழக்குகளில் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல்: சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்; பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு ரூ.1 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : NCC ,Chennai High Court ,Chennai ,Krishnagiri Camp… ,
× RELATED கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை