×
Saravana Stores

நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புகளில் புகுந்தது மழைநீர்: மதுரை செல்லூரில் பொதுமக்கள் அவதி

மதுரை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வருகின்றன. மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும், நேற்றும் நள்ளிரவில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக மதுரையில் உள்ள செல்லூர் 50 அடி ரோடு, சுயராஜ்ஜியபுரம் பகுதிகளில், பல்வேறு தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று பெய்த மழையால் செல்லூர் பந்தல்குடி கால்வாயில் நேற்று இரவு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கால்வாய் கரையை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. இதனால், மாநகராட்சி 24க்குட்பட்ட காமராஜர் தெரு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது.

இதனால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பருவமழை பாதிப்புகளை தவிர்க்க போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. பொக்லைன் உள்பட ராட்சத இயந்திரங்கள், கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் உதவியுடன் தூய்மைப் பணியாளர்கள் 4,000 பேர் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புகளில் புகுந்தது மழைநீர்: மதுரை செல்லூரில் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Madurai Sellur ,Madurai ,Northeast ,Tamil Nadu ,
× RELATED வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள...