×
Saravana Stores

ஓமலூர் அருகே 4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தும் தொடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளி

ஓமலூர், அக்.21: ஓமலூர் அருகே 4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தும், கட்டுமான பணிகள் துவங்காததால் தொடக்கப்பள்ளிக்கான கட்டிடத்திலேயே, இன்று வரை உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் வகுப்பறையில் நெருக்கமாகவும், தரையிலும் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள முத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில், பாலகுட்டப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதால், கிராம மக்கள் தங்களது குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர். அதனால், பள்ளி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி கல்வி மட்டுமின்றி விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை உள்ளிட்ட அனைத்து வகையிலும் சிறந்து விளங்கியதால், கடந்த 5ஆண்டுகளுக்கு முன், உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், அரசு உயர்நிலைப்பள்ளி, ெதாடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே இன்றும் செயல்பட்டு வருகிறது.

தற்போது தொடக்கப்பள்ளியில், 220 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். உயர்நிலைப்பள்ளியில் 239 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சுமார் 25 சென்ட் இடத்திலேயே தொடக்கப்பள்ளிக்கு நான்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதற்குள்ளேயே அங்கன்வாடி மையமும், சத்துணவு கூடமும் செயல்பட்டு வருகிறது. அதனால் மிகவும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்புகளும், மாணவர்களை மிக நெருக்கமாக அமர வைத்தும், மூன்று பேர் அமர வேண்டிய பெஞ்சில், ஐந்து பேரை அமர வைத்தும், பலரை தரையில் அமர வைத்தும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கென ஆய்வகம் அமைக்க இடவசதி இல்லை. மாணவர்கள் விளையாடுவதற்கு தேவையான மைதான இடவசதியும் இல்லை. மாணவ, மாணவிகளுக்கு தேவையான கழிப்பிட வசதிகள் குறைவாக உள்ளது.

இங்கு பணியாற்றும் 2 ஆசிரியர்களும், மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடத்தையே ஆசிரியர்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் அமர்ந்து குறிப்பு எடுப்பதற்கான அறைகள் இல்லை. ெதாடக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப் பள்ளியும் ஒரு பள்ளிக்கான கட்டிடத்திலேயே, மிகுந்த இடநெருக்கடியிலேயே செயல்பட்டு வருகிறது. மேலும், விளையாடுவதற்கு ஆர்வமாக இருந்தாலும் மைதானம் இல்லாததால், விளையாட்டை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று மாணவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இந்நிலையில் 15 வகுப்பறைகள், மாணவர்கள் ஆசிரியர்களுக்கான தனித்தனி கழிப்பிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சிறப்பான மைதானம் ஆகியவை அமைப்பதற்கான திட்ட அறிக்கை, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக தொடக்கப்பள்ளிக்கு சற்று அருகிலேயே, உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்களின் நீண்ட கால போராட்டத்தை தொடர்ந்து, அங்குள்ள குன்று பகுதியில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடம் பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்து 2 ஆண்டுகள் ஆகியும், அங்கு கட்டிடம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த இடத்தை நிரவி சுத்தம் செய்வதற்கான அடிப்படை பணிகள் கூட, இதுவரை துவங்கப்படாமல் உள்ளது.

இதனால், நடப்பாண்டு இந்த பள்ளிக்கான மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள், தங்களது பிள்ளைகளை ஓமலூர் மற்றும் முத்துநாயக்கன்பட்டியில் உள்ள பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இடநெருக்கடி, அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் குறைவாக உள்ள காரணத்தால், தொடக்கப்பள்ளிக்கான மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது. எனவே பாலகுட்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, ஒதுக்கப்பட்ட இடத்தில், பள்ளி கட்டுமான பணிகளை விரைவாக துவங்கி, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் கூறுகையில், ‘அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் அதற்கான கடிதம் அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக அரசு அதற்கான நிதியை ஒதுக்கி, பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தரும் என்று நம்பிக்கை உள்ளது,’ என்றனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி கூறுகையில், ‘பள்ளி கட்டுமானம் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், ‘நிலம் தற்போது பள்ளிக்கல்வி துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான அறிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்படும்’ என்றார்.

இதனிடயே பள்ளிக்கு ஒதுக்கிய இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த எம்எல்ஏ அருள், புதிய பள்ளி கட்டிடம் காட்டுவதற்காக சட்டமன்றத்தில் பேசி, ₹2 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் நிதி பெற்றுள்ளோம். அந்த நிதியை கொண்டு 8 வகுப்பைறைகள், 2 கழிப்பிடம், மைதானம் அமைக்கப்படும். விரைவில் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கும் என்று தெரிவித்தார்.

The post ஓமலூர் அருகே 4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தும் தொடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளி appeared first on Dinakaran.

Tags : Government High School ,Omalur ,OMALUR, OCT ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலம் அரசு பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி