×
Saravana Stores

போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அதிரடி கட்டுப்பாடு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கை: கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால். எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம்.

மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம்.

அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அதிரடி கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Dveka ,Vijay ,Chennai ,Tamil Nadu ,Vetri ,Kazhagam ,president ,
× RELATED விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன்