×
Saravana Stores

‘திராவிட நல் திருநாடு’ வார்த்தையை விட்டுவிட்டு பாடுவதா? நீங்கள் வெறுப்பைக் கக்கினால் தமிழ் நெருப்பைக் கக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு முன்னெடுப்பது ஏற்கக்கூடியதல்ல என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: ஒன்றிய ஆட்சியாளர்கள் நாட்டில் ‘எங்கெங்கு காணினும் இந்தி’-யடா என்று பாடிக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும். இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒன்றிய அரசு முன்னெடுப்பது ஏற்கக்கூடியதல்ல.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: திராவிட நல் திருநாடு என்ற வார்த்தையை விட்டு விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சென்னை தொலைக்காட்சி நிறுவன நிகழ்ச்சியில் பாடியிருக்கிறார்கள். இது கண்டனத்திற்குரியது. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இந்தி நாளின் கொண்டாட்டத்தின்போது தூர்தர்ஷன் அலுவலகத்தில் தான்தோன்றித்தனமாக ஆளுநர் ரவி பேசியது மட்டுமல்ல, தமிழ்த்தாய் வாழ்த்தில், திராவிட நல் திருநாடு என்ற சொற்களை நீக்கிவிட்டு பாட வைத்திருக்கிறார். நீங்கள் பகிரங்கமாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவியை பிரதமர் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்திக்கு மட்டும் கொண்டாட்டங்களை நடத்துவது பிற மொழிகளை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானதாகும். சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஐம்பதாண்டுகளில் அது தமிழுக்கு என்ன செய்தது? எந்தெந்த வகைகளில் தமிழ்மொழி சிறந்தது என்பதை விளக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சென்னைத் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருக்கலாம். அதை விடுத்து இந்தியை மட்டும் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.
விசிக தலைவர் திருமாவளவன்: இந்தி நாள் கொண்டாட்டம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைகிறோம். இந்தி திணிப்பு முயற்சியை விசிக வன்மையாக கண்டிக்கிறது. இந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட
வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:‘ ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது தவறாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல. இனிவரும் காலங்களில் இது போன்ற பிழைகள் நடைபெறக்கூடாது.
கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம் தலைவர்): திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்மொழியை அவமதிக்கும் செயல். நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும் . எனது வன்மையான கண்டனங்கள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது தற்செயல் நிகழ்வா அல்லது திட்டமிட்டு நடைபெற்ற அவமதிப்பா என்பது குறித்து சென்னைத் தொலைக்காட்சி நிலையம் விரிவான விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து திட்டமிட்டு அவமதிக்கப்பட்டது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post ‘திராவிட நல் திருநாடு’ வார்த்தையை விட்டுவிட்டு பாடுவதா? நீங்கள் வெறுப்பைக் கக்கினால் தமிழ் நெருப்பைக் கக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor R. N. Leaders ,Ravi ,Chennai ,EU government ,Secretary General ,Edappadi Palanisami ,EU ,
× RELATED ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்