குன்னூர் வட்டார அளவில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்

 

ஊட்டி, அக். 18: குன்னூரில் நடைபெற்ற மாற்றத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் 103 மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் குன்னூர் வட்டார வள மையம் ஆகியவற்றின் சார்பில், மாற்று திறன் மாணவ, மாணவியருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் அர்ஜுனன், வார்டு கவுன்சிலர் மன்சூர் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் வட்டார கல்வி அலுவலர்கள் யசோதா, மூர்த்தி, அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை மார்கிரேட், மேற்பார்வையாளர் காயத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் குன்னூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 18 வயதிற்கு உபட்ட 103 மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

இதில், 13 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளும், 5 குழந்தைகளுக்கு மருத்துவ உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த முகாமில் மருத்துவ சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு, இலவச ரயில் மற்றும் பஸ் பயண சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நலம், மன நலம், எலும்பு மூட்டு, கண், காது, மூக்கு,தொண்டை மருத்துவம், அன்னப்பிளவு அறுவை சிகிச்சை மற்றும் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

The post குன்னூர் வட்டார அளவில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: