×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* மீந்து போன வாழை, உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து பொரியலுக்கு தூவலாம். மாறுபட்ட சுவையும், மணமும் கிடைக்கும்.
* ரவா லட்டு செய்யும் போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து டேஸ்டியான ரவா லட்டு பிடிக்கலாம்.
* தட்டை செய்யும் போது பிளாஸ்டிக் பேப்பர் வேண்டாம். அதற்கு பதில் வெண்ணெய் கட்டி வரும் மெலிதான ஆயில் பேப்பரில் தட்டையை தட்டிப் போடுங்கள்.- வெ.கார்த்திகா, திண்டுக்கல்.
* சுண்டல் செய்த பின் அதன் மேல் காராபூந்தியை தூவிக் கொடுத்தால் கரகர பூந்தியோடு சுண்டல் ஜமாய்க்கும்.
* எந்த சுண்டல் செய்தாலும் பீட்ரூட், கேரட்டை சீவி துருவலை கலந்துசெய்தால் சூப்பராக இருக்கும்.
* சோமாஸ் செய்யும்போது பூரணம் உதிர்ந்து விடாமல் இருக்க, பூரணத்தில் சிறிது நெய்விட்டு பிசிறி அடைத்தால் உதிராது.
* மோர்க்குழம்பு செய்யும் போது ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்துக் கொண்டால் ருசியே சூப்பராக இருக்கும்.- க.நாகமுத்து, திண்டுக்கல்.
* கொத்தவரங்காய், அவரைக்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளை பொரியல் செய்யும் போது தேங்காயுடன் அரிசியை வறுத்துப் பொரித்து போட்டு இறக்குங்கள். ருசி அபாரமாக இருக்கும்.
* ரொட்டி காய்ந்துவிட்டால் தூக்கி எறியாமல், இட்லியை வேகவைப்பது போல் வேகவையுங்கள். புதிய ரொட்டி போல் மிருதுவானதாகிவிடும்.
* ஜவ்வரிசியை ஊறவைத்து இஞ்சி, பச்சைமிளகாய், சிறிது தயிர், கறிவேப்பிலை போட்டு வடை செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். – கே.விஜயலட்சுமி, திருவண்ணாமலை.
* மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்து வைக்கவும். சூடு சாதத்தில் பொடியை சேர்த்து, உருக்கிய நெய்யை ஊற்றிப் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
* சப்பாத்தி மீந்து போய்விட்டால் வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்த சப்பாத்தியை இரண்டு மூன்று துண்டுகளாக்கி, காய்ந்த எண்ணெயில் போட்டு வடாமாகப் பொரித்து சாப்பிடலாம்.
* சப்பாத்தி மாவை பிசைவதற்கு முன் சூடான நெய்விட்டுப் பிசிறிய பிறகு சூடான பால் விட்டு பிசையவும். கடைசியாக நீர் விட்டு பிசையலாம்.- தாரா, கோவை.
* சிப்ஸ், காராபூந்தி போன்றவற்றை செய்யும்போது மிளகாய்த் தூளுக்கு பதிலாக மிளகு தூளையும் உபயோகப்படுத்தலாம்.
* வடகம் செய்யும் போது, ஒரு கிலோ ஜவ்வரிசிக்கு ஒரு கிலோ தக்காளியை அரைத்து ஜவ்வரிசியுடன் வேகவைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ருசியும் மிகுந்திருக்கும்.
* முட்டை கோஸ் பொரியல் மீந்து விட்டால், அதனுடன் கொஞ்சம் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து பக்கோடா செய்யலாம்.- ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.
* காய்கறி சாலட் செய்யும் போது சில பிரெட் துண்டுகளை போட்டால், சாலட் நீர்த்துப் போகாமல் புதுவித சுவையுடன் இருக்கும்.
* பார்லியையும், கோதுமை மாவையும் சம அளவில் கலந்து சப்பாத்தி செய்தால் அதன் சுவையே அலாதி.
* சர்க்கரை ஒரு தேக்கரண்டி சேர்த்து, தக்காளியை வதக்கினால் சீக்கிரம் வதங்கிவிடும்.- கே.எல்.சுபாக்கனி, கன்னியாகுமரி.
* முட்டை ஆம்லெட் போடும்போது முட்டையை உடைத்தவுடன் அதனுடன் இரண்டு ஸ்பூன் பாலை கலந்து விடுங்கள். பிறகு கல்லில் ஊற்றுங்கள். மிருதுவான, தடிமனமான, சுவையான ஆம்லெட் தயார்.
* எலுமிச்சை பழச்சாறு சுவையாக இல்லாவிட்டால் அத்துடன் இரண்டு சிட்டிகை சால்ட் கலந்து குடித்து பாருங்கள்.
* ஊத்தப்பத்தின் நடுவில் துவாரம் செய்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டால் மேலும் கரகரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.- கே.கவிதா, வேலூர்.
* புளியோதரைக்கு வறுத்த வேர்க்கடலையைச் சேர்ப்பதைவிட பச்சை வேர்க்கடலையை ஊறவைத்து வேகவைத்துச் சேர்த்தால் சுைவ கூட்டும்.
* பிரியாணி தயாரித்து முடித்ததும் தேங்காய் எண்ணெயில் மெலிதாகச் சீவிய பல்லாரி வெங்காயத்தை வறுத்துச் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
* அரிசி உப்புமா செய்வதற்கு பச்சரிசி மாவை உபயோகித்துச் செய்தால் ருசி அதிகரிக்கும்.
* காலையில் செய்த காரக்குழம்பை (வெளியூர்களுக்குச் செல்லும் போது) மறுநாள் வரை வைத்திருந்து சாப்பிட புளியைக் கரைத்து உபயோகிப்பதைவிட, புளிப்ேபஸ்ட் செய்து உபயோகித்தால் கெடாமல் இருக்கும். ருசியும் கூடுதலாக இருக்கும்.

தொகுப்பு: எஸ்.நிரஞ்சனி, சென்னை.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : Rava Lattu ,Dinakaran ,
× RELATED அழகு தரும் விளக்கெண்ணெய்