தங்கையை மட்டுமே தாய் கவனித்ததால் 35வது மாடியிலிருந்து குதித்து கொரிய மாணவன் தற்கொலை

திருப்போரூர்: சென்னை அருகே நாவலூரை அடுத்த ஏகாட்டூர் ஓஎம்ஆர் சாலையில் 40 மாடிகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 35வது மாடியில் யாங் கியூ லிம் (45) என்பவர் மனைவி, மகன் சினோ லிம் (15) மற்றும் மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர், மறைமலைநகரில் உள்ள கொரிய நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சினோ லிம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பன்னாட்டு பள்ளியில் 9ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், யாங் கியூ லிம் அலுவலக வேலையாக கடந்த வாரம் தென்கொரியா சென்றுள்ளார்.

வீட்டில் அவரது மனைவி, மகன், மகள் ஆகிய 3 பேரும் மட்டுமே இருந்தநிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில், இவர்கள் வசிக்கும் குடியிருப்பின் பின் பக்கத்தில் பயங்கர சத்தம் கேட்டது. அப்போது, பணியிலிருந்த பாதுகாவலர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் சிறுவனின் சடலம் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் வந்து ஒவ்வொரு மாடியாக சோதனை செய்தபோது, 35வது மாடியில் வசித்து வந்த கொரிய மாணவன் சினோ லிம், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தகவல் அவரது தாய்க்கே தெரியாமல் இருந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று பார்த்தபோதுதான் தெரியவந்தது. இதுகுறித்து, உடனடியாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டில் ஆய்வு செய்ததில் கொரிய மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்தது. இறந்துபோன சினோ லிம்மின் தாயாருக்கு கொரிய மொழி மட்டுமே தெரியும் என்பதால், அதை தமிழில் மொழி பெயர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது தந்தை வேலை செய்யும் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அந்த கடிததத்தை போலீசார் மொழி பெயர்த்து பார்த்ததில், உயிரிழந்த மாணவன் சினோ லிம், வீட்டில் நானும் எனது தங்கையும் உள்ள நிலையில், எனது அம்மா தங்கையை மட்டும் கவனித்து கொள்வதாகவும், தன்னை கவனிக்காமல் அலட்சியம் செய்வதால்தான் நான் தற்கொலை செய்துக்கொள்கிறேன் என்றும் எழுதியிருப்பது தெரியவந்தது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தங்கையை மட்டுமே தாய் கவனித்ததால் 35வது மாடியிலிருந்து குதித்து கொரிய மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: