கடந்த 9 மாதங்களில் ஆன்லைன் மூலம் 91,161 பேரிடம் ரூ.1,116 கோடி மோசடி: மாநில சைபர் கிரைம் மூலம் குற்றவாளிகளின் ரூ.526 கோடி முடக்கம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 91,161 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1,116 கோடியை சைபர் குற்றவாளிகள் மோசடி செய்துள்ளனர். மாநில சைபர் கிரைம் முயற்சியால் மோசடி நபர்களிடம் இருந்து ரூ.526 கோடி முடக்கக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சைபர் கிரைம் மூலம் இணைய நிதி மோசடிகள், கிரிப்டோகரன்சி மோசடிகள் என ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் 30 வரையிலான 9 மாதங்களில் 91 ஆயிரத்து 161 பேரிடம் சிபிஐயில் இருந்து பேசுவதாகவும், கிரிப்டோகரன்சி என பல்வேறு ஆன்லைன் மோசடிகள் மூலம் 1,116 கோடியை சைபர் குற்றவாளிகள் பறித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில சைபர் கிரைம் பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம், சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உள்ள ரூ.526 கோடி முடக்கக்கப்பட்டுள்ளது. மேலும், மோசடி நபர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 9 மாதங்களில் ரூ.48 கோடி திரும்ப பெற்று தரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆன்லைன் மோசடி நபர்களிடம் ஏமாறக் கூடாது. பொதுவாக ஆன்லைனில் யாரையும் கைது செய்ய முடியாது. எனவே நீங்கள் கைது செய்யப்பட இருப்பதாக யாராவது தொலைபேசி மூலம் கூறினால் தயவு செய்து பீதி அடைய வேண்டாம். பணம் செலுத்த வேண்டாம். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தெரியாத குழுக்களில் சேர வேண்டாம். அப்படி யாரேனும் மோசடி செய்தால் உடனே சைபர் ஹெல்ப் லைன் எண் 1930 தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாநில சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post கடந்த 9 மாதங்களில் ஆன்லைன் மூலம் 91,161 பேரிடம் ரூ.1,116 கோடி மோசடி: மாநில சைபர் கிரைம் மூலம் குற்றவாளிகளின் ரூ.526 கோடி முடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: