ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி; சொந்த ஊர் செல்ல ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் குவிந்த மக்கள்

கோவை: ஆயுத பூஜையொட்டி இன்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், கோவையில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலர் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில் குவிந்தனர். பயணிகள் வசதிக்காக கோவையில் இருந்து சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகளில் பயணிகள் முந்தியடித்து கொண்டு ஏறிச்சென்றனர். சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பேருந்துகளில் அதிகளவிலான கூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில், தேவைப்பட்டால் இன்னும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையங்களில் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். தவிர, பலர் ரயில்கள் மூலமாகவும் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால், கோவை ரயில்நிலையத்திலும் கூட்ட நெரிசல் இருந்தது.
சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஆம்னி பேருந்து நிலையத்திலும் அதிகளவில் பயணிகள் குவிந்தனர். இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கண்காணிப்பு பணிகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

The post ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி; சொந்த ஊர் செல்ல ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: