துரைச்சாமிபுரத்தில் மணிகட்டி மாடசாமி கோயில் கொடை விழா இன்று துவக்கம்

குளத்தூர், அக். 11: துரைச்சாமிபுரம் மணிகட்டி மாடசாமி கோயிலில் இன்று(11ம் தேதி) கொடை விழா தொடங்குகிறது. நாளை, பொதுமக்களுக்கு கறி விருந்து நடக்கிறது. குளத்தூரை அடுத்த தெற்கு கல்மேடு ஊராட்சிக்குட்பட்ட துரைச்சாமிபுரம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற மணிகட்டி மாடசாமி கோயில் உள்ளது. அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் கொடை விழா, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்டாசி மாதம் கடைசி வெள்ளி, சனி என 2 நாட்கள் நடைபெறும். வழக்கம்போல் இந்தாண்டு கொடை விழா இன்று(11ம் தேதி) மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெறுகிறது.

இதில் சென்னை, மதுரை, திருச்சி, ராமநாதபுரம், நெல்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்.இன்று காலை பூஜையுடன் துவங்கும் கொடை விழாவில் மதியம் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, உச்சிக்கால பூஜை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் சாமக்கொடை, வேட்டையாடுதல் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) அதிகாலை நடைபெறும் சிறப்பு பூஜையை அடுத்து கோயில் முன்பு நேர்ச்சையாக விடப்பட்ட ஆடு, சேவல்களை பலியிடுதல் நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை கொடை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை வரை சைவ அன்னதானம், சனிக்கிழமை கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை வரை அசைவ கறி விருந்தும் பக்தர்களுக்கு வழங்குகின்றனர். மேலும் கோயிலுக்கு நேர்ச்சையாக விடப்பட்ட ஆடு, சேவல்களை கொடை விழாவில் கொண்டு வந்து நேர்ச்சை செலுத்துமாறு பக்தர்களுக்கு கோயில் விழா குழுவினர் தெரிவித்து உள்ளனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராஜ், குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், பசுபதி, அறநிலையத்துறை செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் முப்பிடாதி மற்றும் கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

The post துரைச்சாமிபுரத்தில் மணிகட்டி மாடசாமி கோயில் கொடை விழா இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: