உலகின் சில பகுதிகளில் மோதல்கள், பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்தியா-ஆசியான் உறவு முக்கியமானது: லாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

வியன்டைன்: உலகின் சில பகுதிகளில் மோதல்கள், பதற்றங்கள் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் இந்தியா-ஆசியான் உறவு முக்கியமானது என்று லாவோஸில் நடந்த இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். 21வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு, 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு லாவோஸில் நடக்கிறது. இந்த மாநாட்டில்பங்கேற்ற பிரதமர் மோடியை லாவோஸ் வாழ் இந்தியர்கள் வரவேற்றனர். அங்கு இந்தியர்களுடன் மோடி கலந்துரையாடினார். பின்னர் லாவோஸ் நாட்டின் ராமாயணம், பிரலக் பிரலாம் நிகழ்ச்சியை மோடி கண்டு ரசித்தார். அதை தொடர்ந்து மூத்த புத்த துறவிகளின் ஆசீர்வாத நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். வாட் பூ கோயில் மற்றும் தொடர்புடைய நினைவுச்சின்னங்களை மீட்டெடுப்பதில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது. இது குறித்த கண்காட்சியையும் பார்வையிட்டார். இந்தியா-ஆசியான் மாநாட்டில் மோடி பேசுகையில், ‘‘10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா தனது கிழக்கு சார்ந்த கொள்கையை அறிவித்தது.

இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு புதிய ஆற்றலையும், வேகத்தையும் இது கொடுத்துள்ளது. ஆசியாவின் நூற்றாண்டு என அழைக்கப்படும் 21ம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசிய நாடுகளின் நூற்றாண்டாக இருக்கும் என நம்புகிறேன். உலகின் பல்வேறு பகுதிகள் மோதல்கள் மற்றும் பதற்றங்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்தியா- ஆசியான் நட்புறவு,பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை முக்கியமானது. ஆசியான் மையத்தை மனதில் வைத்து, இந்தியா 2019 ல் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முயற்சியை அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகளில் ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் இரட்டிப்பாகியுள்ளது. 7 ஆசியான் நாடுகளுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் புரூனை நாட்டுக்கும் சேவை தொடங்கப்படும்’’ என்றார்.

 

The post உலகின் சில பகுதிகளில் மோதல்கள், பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்தியா-ஆசியான் உறவு முக்கியமானது: லாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: