×

செஞ்சி சாலை பெரிய வாய்க்காலை தூர்வாரியபோது கிரேன் இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஆபரேட்டர் படுகாயம்

புதுச்சேரி: புதுவை செஞ்சிசாலை பெரிய வாய்க்காலில் இன்று தூர்வாரும் பணி நடந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையில் கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரி ஸ்மாரட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.27.50 ேகாடி செலவில் பெரிய வாய்கால் தூர்வாரும் பணி கடந்த பிப்., மாதம் முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். இந்த பணியின் போது பெரிய கால்வாயில் உள்ள 13 இடங்களில் புனரமைத்து, கால்வாயின் ஓரங்களை நடைபாதையாக மற்ற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது புஸ்சி வீதி-பழைய சட்ட கல்லூரி அருகே பெரிய வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கால்வாயை தூர்வார இன்று காலை சிறிய தூர்வாரும் இயந்திரத்தை, கிரேன் மூலம் கால்வாயில் இறக்கி பின்னர் பணிகள் நடந்தது. அப்போது சாலையோர ஸ்லாப் மீது கிரேன் வாகனம் நின்றிருந்த நிலையில் திடீரென ஸ்லாப் உடைந்து கிரேன் சாய்ந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வாய்க்காலை தூர்வார இறக்கப்பட இருந்த சிறிய இயந்திரமும் தலைகுப்புற வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் கிரேன் ஆபரேட்டர் படுகாயம் அடைந்தார். உடனே இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த கிரேன் ஆபரேட்டரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் வாய்க்கால ஓரத்தில் சாலையில் கவிழ்ந்த கிரேன் மற்றும் தூர்வாரும் இயந்திரத்தை மீட்டு வெளியே கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வாகனத்தை நிறுத்தி போட்டோ, வீடியோ எடுத்து செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

The post செஞ்சி சாலை பெரிய வாய்க்காலை தூர்வாரியபோது கிரேன் இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஆபரேட்டர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Senchi Road ,Puducherry ,Puduwai Senchisalai Periya Canal ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்..!!