×

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

சென்னை: ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்து சாதி அர்ச்சகர் பணியிடங்களை நிரப்பி இறைவன் ஆலயங்களில் சமத்துவத்திற்காக, தொடர்ந்து போராடி வரும் அமைப்புகள் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தான். இறைவன் ஆலயங்களில் குறிப்பிட்ட சாதியினர் நுழையக்கூடாது என்பதை எதிர்த்து தொடர் இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் வழியையொட்டி, அதே மரபில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும், சாதிய வர்ணாசிரம சனாதான கட்டமைப்பை எதிர்த்து களமாடி வருகிறார்.

மக்களிடையே சமத்துவத்தை உருவாக்குவதுதான், அரசியல் சட்ட பணி மட்டுமல்லாது இறைவன் விரும்பும் பணியும் கூட. சமூகத்தை போல் இறைவன் ஆலயங்களிலும் சமத்துவம் தழைத்தோங்க வேண்டும், என்பதே உண்மையாக இறைவன் விரும்பும் ஆன்மீகப் பணி. திருப்பதி லட்டை வைத்து, போலி மதவாத அரசியல் செய்யும் நடிகர் பவன் கல்யாண் போன்றவர்களுக்கும், இறைவன் விரும்பும் உண்மையான ஆன்மீகத்திற்கும் தூரம் மிக அதிகம். உச்சநீதிமன்றம் பவன் கல்யாணின் போலி மதவாத அரசியலை கண்டித்த பின், சனாதனப் பிரச்சினையை கையில் எடுக்கிறார் பவன் கல்யாண் என்ற போலி ஆன்மீகவாதி.

உண்மையான இறைப் பெற்றுக் கொண்ட எவரும், மாற்று மதத்தினரை எதிரியாக பார்க்க மாட்டார்கள். அவர்கள் மீது வன்மத்தைக் கக்க மாட்டார்கள். உலக மக்கள் அனைவரும் இறைவன் படைப்பு என்று நம்பும் உண்மையான ஆன்மீகவாதிகள், இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ, சீக்கியம், பௌத்த மத மக்கள் மட்டுமல்லாது நாத்தியவாதிகளையும், இறைவன் படைப்பாகவே பார்ப்பார்கள். மனித இனம் மட்டுமல்லாது, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் சம அன்பு செலுத்துவார்கள்.

அரசியலுக்காக மதவாத ஆன்மீகத்தை கையில் எடுக்கும், நடிகர் பவன் கல்யாண், தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சொன்னதைத்தான், புத்தர், மகாவீரர், வள்ளுவர், வள்ளலார், அம்பேத்கர் சொன்னார்கள். சமத்துவம் தான், மனித சமூகத்தின் தீராத தாகம். அதுதான் திராவிட இயக்கத்தின் தாரக மந்திரம். அரசியல் சட்டத்தின் நோக்கமும் அதுதான்.

சமத்துவ இலக்கை இருக பற்றிக் கொண்டு முன்னோக்கி நகரும் தமிழகம் தான் இந்தியாவின் முன்மாதிரி. பவன் கல்யாண் போன்ற போலி ஆன்மீகவாதிகளை புறக்கணித்து, சமத்துவ பாதையில் பயணிக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை நிற்போம். ஆந்திர, தமிழக மக்களிடையே பகையை தூண்டும் விதத்தில் பேசி, சிறுபான்மை மக்களை இழிவு படுத்தி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயலும், நடிகர் பவன் கல்யாண் மீது ஆந்திர மாநில அரசும்,தமிழ்நாடு காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான ஆன்மீகவாதிகள் நடிகர் பவன் கல்யாண் போலி மதவாத அரசியலை நிராகரிக்க வேண்டும் என அர்ச்சக மாணவர் சங்கம் சார்பில் வேண்டுகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டது.

The post ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : AP STATE ,BHAWAN KALYAN ,ARCHAGAR ASSOCIATION ,Chennai ,AP ,Deputy ,Bhavan Kalyan ,All Caste Arch-Trained Students Association ,Tamil Nadu Government Appointment Archers Association ,Archarchs Association ,
× RELATED போதை மாத்திரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது..!!