×

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

திருமலை: திருமலையில் ரூ.13.45 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை திறந்து வைத்தார்.உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். இதனைதொடர்ந்து பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு வாகன மண்டபத்தில் இருந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளிய மலையப்ப சுவாமியை முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் வழிபட்டனர்.

இதனிடையே ஆந்திர அரசு சார்பில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதமாக பட்டு வஸ்திரத்தை சுவாமிக்கு நேற்றிரவு காணிக்கையாக வழங்கினார். மேலும், சுவாமியை தரிசித்து, 2025-ம் ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர்கள், டைரிக்களை வெளியிட்டார். இந்த நிலையில், திருமலை பாஞ்ச சன்யம் விடுதி அருகே 1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் தயார் செய்யும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் ரூ.13.45 கோடி செலவில் மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை கட்டியது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.இதில் ஆந்திர மாநில இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ராம்நாராயண ரெட்டி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியமள ராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : AP ,Chandrababu ,Tirumala ,Thirumalai ,Chandrababu Naidu ,Sri Wakulamatha ,Tirupathi Eumalayan Temple ,Anandana ,
× RELATED கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது :...