×

சிறுவர்களை பலிகடாவாக்கும் சமூக விரோதிகள்; இந்தியாவில் 10 ஆண்டுகளில் சிறார் குற்றங்கள் அதிகரிப்பு: நடவடிக்கை மாற்றங்களை கண்காணிப்பது அவசியம்

இன்றைய தலைமுறைதான் நம் நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள். இவர்களை சீர்படுத்தும் பணியில் 99சதவீதம் கவனம் செலுத்தினாலும், பாழ்படுத்தும் வேலைகளும் ஒரு சதவீதம் என்ற அளவில் அரங்கேறி வருவது வேதனைக்குரியது. வளரும் நாடான இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச புள்ளிவிபரங்கள் மற்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது இதற்கான சாட்சியம். கொலை வழக்குகளில் 3.2 சதவீதம், கொள்ளை வழக்குகளில் 4.8 சதவீதம், வழிப்பறி வழக்குகளில் 5.6 சதவீதம், பாலியல் வழக்குகளில் 2.1 சதவீதம் பேர், சிறார் குற்றவாளிகளாகவே சிக்கி வருகின்றனர் என்பது சமீபத்திய நிலவரம். இதேபோல் உள்ளூரில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையிலும் 5.3 சதவீதம் பேர் சிக்கி வருகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இதேபோல் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரங்களும் தொடர்ந்து சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளது. மேலும் இது குறித்த பல்வேறு தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வறுமையால் சிறார் குற்றவாளிகள் அதிகம் உருவாகிறார்கள் என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சிறார் குற்றங்களில் ஈடுபடுவோரில் 96 சதவீதம் பேர் அத்தகைய நிலையில் இல்லை. குற்றவழக்குளில் சிறார் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தும் நிலையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறார் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் தான் வசித்து வருகின்றனர். ஒரு சிலர் நெருங்கிய உறவினர்களின் கண்காணிப்பில் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல் ஒரு முறை குற்றவழக்கில் சிக்கியவரே தொடர்ந்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு வரும் நிலையும் உள்ளது.

மிக முக்கியமாக ஒருவரது குடும்பசூழல், வசிப்பிடம், சகாக்களின் தொடர்பு போன்றவை சிறார் குற்றவாளிகள் அதிகம் உருவாவதற்கு வழிவகுத்துக் கொடுக்கிறது. குறிப்பாக இதேபோல் சிறார் குற்றவாளிகள் உருவாவதற்கு இன்றைய இணையதள வளர்ச்சியும் மிக முக்கிய காரணம் என்ற அதிர்ச்சி தகவலும் ெவளியாகி உள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுவனது நடவடிக்கையில் மாற்றங்கள், அவனது நடை, உடை பாவனையில் மாற்றங்கள், புதிய வண்டி வாகனங்களை உபயோகித்தல் போன்ற நடவடிக்கைளை பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இது அவர் ஏதாவது ஒரு குற்றச்செயலுக்கு துணையாக இருப்பதாலோ அல்லது அதை நிகழ்த்துவோரிடம் தொடர்பில் இருப்பதாலே வந்துள்ளது என்று சந்தேகப்படுவதும், அதற்காக தொடர்ந்து கண்காணிப்பதும் மிகவும் அவசியம் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இது குறித்து ேசலம் மண்டல இளம்சிறார் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: இளையதலைமுறையாக இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நம்நாட்டின் வருங்காலத்தூண்கள்தான். அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கி சீர்படுத்துவது பெற்றோரின் கடமை மட்டுமல்ல. சமூக உணர்வு கொண்ட அனைவருக்கும் அவசியமானது. ஆனால் இன்றைய நவீன வளர்ச்சியும், நாகரீகத்தின் சுழற்சியும் இளைஞர்களையும், சிறுவர்களையும் வேறுபாதைக்கும் கொண்டு போய்விடுகிறது. வரம்பு மீறிய வசதிகள் இல்லாத நடுத்தர குடும்பத்து குழந்தைகளின் எண்ண ஓட்டம் இதில் சிக்கும் போது அவர்களின் வழித்தடம் மாறுகிறது. சமீபகாலமாக தங்கள் பகுதிகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் உள்ளூர் விஷமிகளும், குற்றவழக்குகளில் சிக்கிய ரவுடிகளும் சிறார் குற்றவாளிகளை வளர்த்ெதடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய கொள்ளை, கொலை சம்பவங்களில் கடந்த சில ஆண்டுகளாக சிறார் குற்றவாளிகளின் பங்களிப்பும் அதிகமாக இருப்பதே இதற்கான சாட்சி. இதற்காக அவர்களுக்கு பணத்தாசை காட்டியும், ேபாதையை ஊட்டியும் வலைவிரித்து வருகின்றனர். ஏதாவது பிரச்னை என்றால் தாங்கள் துணையாக இருப்பதாகவும் மூளைச்சலவை செய்து தங்கள் வழிக்கு கொண்டு வருகின்றனர். எனவே அந்தந்த பகுதி போலீசார், சமூகவிரோதிகளையும், பழைய குற்றவாளிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் சிறார்கள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மிக முக்கியமாக சீர்திருத்த பள்ளியில் இருந்து வீடு திரும்பும் சிறார்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதும் மிகவும் அவசியம். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

தமிழகத்தில் 7.1% குற்றங்கள்
தேசிய அளவோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி குற்றங்களில் சேர்க்கப்படும் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2016ல் 3சதவீதமாக இருந்த சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை 2017ல் 3.5 சதவீதம், 2018ல் 4.8 சதவீதம், 2019ல் 5.3 சதவீதம், 2020ல் 5.9 சதவீதம், 2021ல் 6.1 சதவீதம் என்று அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டில் 6.8 சதவீதம் என்றும், கடந்தாண்டில் (2023) 7.1 சதவீதம் என்றும் இது அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

நாகரீகம் என்ற பெயரில்…
நாகரீகம் என்ற பெயரில் மதுபழக்கம், போதைபொருட்களின் பழக்கம் மாணவப்பருவத்தினரிடம் அதிகரித்து வருகிறது. அதேபோல் பணிச்சுமையாலும், பரபரப்பான வாழ்க்ைகச் சூழலிலும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கவும் பெற்றோர் தவறி விடுகின்றனர். விலைஉயர்ந்த பொருட்கள் மீது நாட்டம் கொள்ளும் சிறுவர்கள் சிலர், அதை வாங்குவதற்கு எந்த அளவிலும் இறங்கிச் செல்வதற்கு தயாராக உள்ளனர். அதேபோல் ஆசிரியர்கள் கடந்த காலங்களில் எடுத்துக் கொண்ட அக்கரையையும் தற்போது எடுத்துக்கொள்வதில்லை. ஒரு சில கண்டிப்புகள் அவர்களுக்கு எதிராகவே திரும்பி தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது. இதுபோன்ற பல்வேறு சமூக சூழல்கள், சிறார் குற்றவாளிகள் அதிகளவில் உருவாக காரணமாக அமைந்து விடுகிறது என்பதும் ஆய்வாளர்களின் ஆதங்கம்.

The post சிறுவர்களை பலிகடாவாக்கும் சமூக விரோதிகள்; இந்தியாவில் 10 ஆண்டுகளில் சிறார் குற்றங்கள் அதிகரிப்பு: நடவடிக்கை மாற்றங்களை கண்காணிப்பது அவசியம் appeared first on Dinakaran.

Tags : India ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு