×

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் எஸ்கேப் ஆன காதலனை தேடி கண்டுபிடித்து கரம் பிடித்த துணிச்சல் ஐடி பெண்

திருவள்ளூர், அக். 4: கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் எஸ்கேப் ஆன காதலனை கண்டுபிடித்து திருமணம் செய்துகொண்ட ஐடி பெண், காவல் நிலையத்தில் ஜோடியாக ஆஜரான சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியைச் சேர்ந்தவர் தரன் (29). இவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த அனுசியா (29) என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக தரன் காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் தரன் மற்றும் அனுசியா ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, திருமணப் பத்திரிகையும் அடிக்கப்பட்டது. கடந்த மாதம் 15ம் தேதி திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெற இருந்தது.

இதனையடுத்து 14ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடந்த பின்னர், அன்று இரவோடு இரவாக மணமகன் தரன் மண்டபத்திலிருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், தரனைப் பற்றி அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்துப் பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அனுசியா வேற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அவரை திருமணம் செய்ய விருப்பமில்லாமல் திடீரென தரன் மனம் மாறி எஸ்கேப் ஆனதாக கூறப்படுகிறது. பின்னர், இதுகுறித்து திருத்தணி காவல் நிலையத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவில் தரன் மீது அனுசியா குடும்பத்தார் புகார் அளித்தனர். அதன்பேரில் திருத்தணி போலீசார் மணமகன் தரன் குடும்பத்தார் 5க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தரனை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருவள்ளூர் பகுதியில் தலைமறைவாக இருந்த தரனை அனுசியா கண்டுபிடித்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று அவரை கையும் களவுமாக பிடித்து, அவரை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள அம்மன் கோயிலுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் மணமகன் தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் தரன் கையால் அனுசியா தாலி கட்டிக்கொண்டார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரும் ஆஜராகினர்.

இதையடுத்து இருவரையும் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சமாதானமாகச் செல்வதாக கூறிய நிலையில் இருவீட்டார் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பிவைத்தனர். திருமணத்திற்கு முதல்நாள் ஏஸ்கேப்பான காதலனை தேடி கண்டுபிடித்த ஐடி பெண், உறவினர்கள், போலீசார் மத்தியில் அவரையே திருமணம் செய்துகொண்ட இந்த சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் எஸ்கேப் ஆன காதலனை தேடி கண்டுபிடித்து கரம் பிடித்த துணிச்சல் ஐடி பெண் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Nemili ,Ranipet district ,
× RELATED நம்மாழ்வார் விருது வழங்க நிலத்தில் மண் பரிசோதனை