×

ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும்: இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!!

டெல்லி: ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2023 அக்.7ம் தேதி சம்பவத்திற்கு பின் இஸ்ரேல் – காசா இடையிலான போர் உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த 2 வாரமாக இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர், வாக்கி டாக்கி போன்ற கருவிகளை வெடிக்க செய்து நடத்திய தாக்குதலை தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் தீவிரமடைந்தது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 1,300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பெய்ரூட்டில் பதுங்கியிருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல் மூலம் கொன்றது.

இந்நிலையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்படுவதால் அந்நாட்டில் சைரன்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. சுமார் 10 மில்லியன் பொதுமக்கள் ஈரானிய ஏவுகணைகளால் குறிவைக்கப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முதல் ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்று இரவு 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி உள்ளது. இருப்பினும் பல ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து தகர்த்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ஈரானுக்கு அவசியமின்றி செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய மக்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தயவுசெய்து எச்சரிக்கையுடன் இருங்கள், ஈரான் நாட்டிற்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். பாதுகாப்பு முகாம்களுக்கு அருகில் இருங்கள். தூதரகம் நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மேலும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது என்று தூதரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

The post ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும்: இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Iran ,Union Govt ,Indians ,Delhi ,Indian Ministry of External Affairs ,Israel ,Gaza ,Dinakaran ,
× RELATED ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை...