×

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

சேலம்: நாடு முழுவதும் இம்மாதம் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ₹48 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ₹1,903 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ஸ்வீட் கடை, ஓட்டல் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாதம் தோறும் நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதேவேளையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை இம் மாதத்திற்கு ₹48 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ₹1,855 என இருந்தநிலையில், ₹48 உயர்ந்து ₹1903 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ₹1803.50ல் இருந்து ₹48 அதிகரித்து ₹1,851.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் ₹1,740, மும்பையில் ₹1,692.50, கொல்கத்தாவில் ₹1850.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஸ்வீட், காரம் தயாரிப்பில் ஓட்டல் மற்றும் ஸ்வீட் கடையினர் தீவிரமாக ஈடுபடுவார்கள். இதற்காக அதிகளவு வர்த்தக சிலிண்டர்களை உபயோகப்படுத்துவார்கள். இந்நிலையில் வர்த்தக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு உயர்த்தியுள்ளதால், ஸ்வீட், ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், சர்வதேச சந்தையில் கடந்த 3 ஆண்டுகள் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 70 டாலர் என்ற நிலைக்கு குறைந்து வந்திருக்கிறது. அதனால், நடப்பு மாதம் காஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு குறைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கு மாறாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மாற்றாமலும், வர்த்தக சிலிண்டர் விலையை உயர்த்தியும் அறிவித்துள்ளனர். இது ஒன்றிய பாஜ அரசின் மீது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

The post வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Diwali ,Salem ,Chennai ,Dinakaran ,
× RELATED இயற்கை 360°