×

விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வரும் மாணவர்கள் ஊக்கம் பெறுவார்கள்: தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய குரூப் கேப்டன் நம்பிக்கை

சென்னை: விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை காண வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஊக்கம்பெற்று, பிற்காலத்தில் எங்கள் குழுவில் இணைவார்கள் என்று தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய குரூப் கேப்டன் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சி குறித்து தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில், தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தின் குரூப் கேப்டன் பரமன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
92வது இந்திய விமான படையின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மொத்தம் 72 விமானங்களின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆகாஷ் கங்கா என்னும் பாராசூட் குழுவினர் முதலில் சாகச நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார்கள். அதன் பின்னர் இந்த நிகழ்ச்சி மக்கள் முன்னிலையில் மிக கோலாகலமான அளவில் நடைபெறும். 4ம் தேதி முழு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியையும் காண மக்கள் வரவேற்கப்படுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் 3 ராணுவ பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இது பெரிய நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் இது முதன்முறையாக இந்த அளவில் நடைபெற உள்ளது. இதற்காக லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அழைப்பு விடுத்துள்ளோம். கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களுக்கு ஒரு பாடம் போல இருக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்து இந்நிகழ்ச்சியை பார்த்து ஊக்கம் பெற்று, பிற்காலத்தில் எங்களுடன் இணைவார்கள் என்றார்.

The post விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வரும் மாணவர்கள் ஊக்கம் பெறுவார்கள்: தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய குரூப் கேப்டன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Hope ,Brass Air Force Training Center ,CHENNAI ,TAMBARAM AIR FORCE TRAINING CENTER GROUP ,FORCE ,Chennai Marina ,Dinakaran ,
× RELATED எந்த சர்வதேச போட்டிகள் என்றாலும்...