×

கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி

திருவண்ணாமலை, அக்.2: சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி கட்ட மடுவு ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரா(55), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், கடந்த 18.1.2022 அன்று, தெருவில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை இழுத்துச் சென்று முட்புதர் மறைவிடத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட மகேந்திரா முயற்சித்துள்ளார். அதனால், சிறுமி அழுது அலறி கூச்சலிட்டார். உடனே, அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்தனர். உடனே, சிறுமியை பிடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து மகேந்திரா தப்பிவிட்டார். அதைத்தொடர்ந்து, செங்கம் மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கூலித் தொழிலாளி மகேந்திராவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கூலித் தொழிலாளி மகேந்திராவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மகேந்திரனை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai POCSO court ,Thiruvannamalai ,POCSO Court ,Mahendra ,Maduvu Rajapalayam village ,Thiruvannamalai district ,Sengam ,Melrawandawadi Katta ,Tiruvannamalai POCSO court ,
× RELATED சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...