×

போலி தங்க நாணயங்கள் விற்று மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது * லாரி உரிமையாளர் புகாரில் செங்கம் போலீசார் நடவடிக்கை * சென்னையை சேர்ந்தவர்களை ஏமாற்ற முயன்றபோது சிக்கினர் கிணறு தோண்டும்போது புதையல் கிடைத்ததாக கூறி

செங்கம், அக்.1: கிணறு தோண்டும்போது புதையல் கிடைத்ததாக கூறி போலி தங்க நாணயங்கள் விற்று மோசடியில் ஈடுபட்டதாக லாரி உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில், அதிமுக நிர்வாகி உட்பட 6 பேரை செங்கம் போலீசார் கைது செய்தனர். பலரிடம் மோசடியில் ஈடுபட்ட இவர்கள் சென்னையை சேர்ந்தவர்களை ஏமாற்ற முயன்றபோது சிக்கினர். நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(43), லாரி உரிமையாளர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது: நான் லாரியில் திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு லோடு ஏற்றிச்சென்றேன். அப்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கிணறு வெட்டும் தொழிலாளி தர்மலிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் என 8 பேர் லாரியில் ஏறினர். அவர்களுடன் பேசி வந்த நிலையில் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டேன். அதேபோல் அவர்களுக்கும் எனது செல்போன் எண்ணை கொடுத்தேன். அதன்பிறகு அடிக்கடி பேசி வந்தோம். இதற்கிடையில் நான் எனது லாரியை ₹4 லட்சத்துக்கு விற்பனை செய்தேன். அந்த பணத்தை வைத்து வேறு ஏதேனும் வியாபாரம் செய்ய நினைத்தேன். அப்போது தர்மலிங்கம் தரப்பினரிடம் ஆலோசித்தேன். அதற்கு அவர்கள், எங்களிடம் விவசாய கிணறு தோண்டும்போது 140 தங்க நாணயம் கிடைத்தது. அதன் மதிப்பு ₹30 லட்சம், உங்களிடம் உள்ள பணத்தை எங்களிடம் கொடுத்தால் 140 தங்க நாணயங்களை தருகிறோம் என்றனர்.

அதனை நம்பிய நான், ₹4 லட்சம் கொடுத்து 140 தங்க நாணயங்களை வாங்கிக்கொண்டேன். ஆனால் அந்த நாணயங்கள் அனைத்தும் போலி என பிறகுதான் தெரியவந்தது. இதை தர்மலிங்கம் உள்ளிட்டோரிடம் கேட்டபோது அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, எஸ்ஐ ஆனந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து தங்க நாணய மோசடி ஆசாமிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார், வேட்டவலம் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த பெண் உட்பட 6 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா சின்ன அமணகுப்பத்தை சேர்ந்த சத்யராஜ்(24), பெரிய அமணகுப்பத்தை சேர்ந்த அருள்முருகன்(45), வெங்கடேசன்(24), தர்மலிங்கம்(67), கடலூர் மாவட்டம் கொடைக்கல்குப்பத்தை சேர்ந்த சுரேஷ்(48), நாகவள்ளி(39) ஆகிய 6 பேர் என்பதும், இவர்கள் நாமக்கல்லை சேர்ந்த லாரி உரிமையாளர் சீனிவாசனிடம் போலி தங்க நாணயங்களை கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இதேபோல் இவர்கள் பலரிடம் மோசடி செய்துள்ளதும், சென்னையை சேர்ந்த 2 பேரை ஏமாற்றி போலி தங்க நாணயங்களை விற்பதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையில் இவர்கள் போலீசில் சிக்கி கொண்டதை பார்த்து தங்க நாணயங்கள் வாங்க பைக்கில் வந்தவர்கள், தப்பி சென்றுள்ளனர். தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து கார், தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நேற்று போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மோசடி கும்பலை சேர்ந்த 2 பேரை தேடி வருகின்றனர். கைதானவர்களில் தர்மலிங்கம் என்பவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட பெரியஅவணம் கிராம அதிமுக கிளை செயலாளராக உள்ளதும், பறிமுதல் செய்யப்பட்ட கார் அவரது மனைவி பெயரில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

The post போலி தங்க நாணயங்கள் விற்று மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது * லாரி உரிமையாளர் புகாரில் செங்கம் போலீசார் நடவடிக்கை * சென்னையை சேர்ந்தவர்களை ஏமாற்ற முயன்றபோது சிக்கினர் கிணறு தோண்டும்போது புதையல் கிடைத்ததாக கூறி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Sengam police ,Chennai ,Sengam ,
× RELATED மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ...