×
Saravana Stores

காலை உணவு திட்டத்தின் கீழ் 1393 பள்ளிகளில் பயிலும் 76,339 மாணவர்கள் பயன்

கிருஷ்ணகிரி, செப்.30: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1393 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 76,339 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லூரிக் கனவு, நம் பள்ளி நம் பெருமை, புதுமைப் பெண் திட்டம், மாணவர் மனசு மற்றும் நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதல், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் இருக்கும் நிலையை தவிர்க்கவும், பள்ளிகள் தொலைவில் இருப்பது மட்டுமல்லாமல், சிலருடைய குடும்ப சூழல் காரணமாக இருக்கும் குழந்தைகள் காலை உணவு தவிர்ப்பதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிப் பிள்ளைகளுக்கு கல்வியுடன் சேர்த்து உணவும் வழங்க வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்துடன், அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதியன்று முதற்கட்டமாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவுபப்டுத்தி தொடங்கி வைத்தார்.

பின்னர், பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், அனைத்து குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும், ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுககு இத்திட்டத்தினை விரிவுப்படுதி கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதியன்று முதற்கட்டமாக துவக்கி வைத்தும், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று விரிவாக்கமும் செய்யப்பட்டது. மேலும் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதியன்று அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1358 ஊரகப் பள்ளிகள் மற்றும் 35 பேரூராட்சி பள்ளிகள் என மொத்தம் 1393 பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 76,339 மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் திங்கட் கிழமை சேமியா, காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை ரவா காய்கறி சம்பார், புதன் கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்பும்மா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா, காய்கறி சாம்பார் ஆகியவை காலை உணவாக வழங்கப்படுகிறது.

மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமிலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு, சத்தான உணவினை வழங்குவதன் காரணமாக பள்ளிகளில் மாணவர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள், காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட் செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதாக பெருமிதத்துடன் கூறினர்.

The post காலை உணவு திட்டத்தின் கீழ் 1393 பள்ளிகளில் பயிலும் 76,339 மாணவர்கள் பயன் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...