×

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவிடாமல் தடுத்த 6 பேர் மீது வழக்குப்பதிவு ஆரணி அருகே

ஆரணி, செப்.28: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ள சுரேந்தர் என்பவர், தனது அரிசி ஆலை வைத்து, கடந்த 2018ம் ஆண்டு ஆரணி கனரா வங்கியில் ₹2.60 கோடி கடன் பெற்றுள்ளார். அதன்பின்னர், வங்கியில் பெற்ற கடனை சரிவர செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால், சுரேந்தர் கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால், வங்கி அதிகாரிகள் மூலம் அரிசி ஆலையை ஏலம் விடப்பட்டது. இதில், ஏலம் எடுத்த நபரிடம் அரிசி ஆலையை சுவாதீனம் ஒப்படைக்க வங்கி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை குற்றவியில் நீதிபதி வழங்கிய உத்தரவில், அரிசி ஆலையை பூட்டி சீல்வைத்து, உத்தரவை நிறைவேற்ற திருவண்ணாமலையை சேர்ந்த வழக்கறிஞர் புஷ்பா என்பவரை ஆணையராக நியமிமக்கப்பட்டார். இதையடுத்து நீதிமன்ற ஆணையர் புஷ்பா நேற்றுமுன்தினம் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலத்தில் உள்ள அரிசி ஆலையை பூட்டி சீல் வைத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் வாங்கி ஊழியர்கள் அரிசி ஆலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது, அரிசி ஆலை உரிமையாளரிடம் குத்தகை எடுத்து அரிசி உற்பத்தி செய்துவரும் நபர்கள் உட்பட 6 பேர் சென்று, அரிசி ஆலையில் உள்ள நெல், அரிசி உள்ளிட்ட பொருட்களை எடுக்க 3 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். ஆனால்,வங்கி ஊழியர்கள், அவகாசம் வழங்காமல், ஆணையாளருடன் சென்று பூட்டி சீல் வைக்க முயன்றனர். இதனால், அரிசி ஆலைக்குள் நுழைய விடாமல் தடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற விடாமல் தடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் நீதிமன்ற ஆணையர் புஷ்பா அளித்த புகாரின் பேரில், சுரேந்தர், சரவணன், பழனிவேல், சந்தோஷ்குமார், விஜயகிருஷ்ணன், பிரபாகர் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவிடாமல் தடுத்த 6 பேர் மீது வழக்குப்பதிவு ஆரணி அருகே appeared first on Dinakaran.

Tags : Arani ,Surender ,Rattinamangalam ,Arani, Tiruvannamalai district ,Arani Canara Bank ,Dinakaran ,
× RELATED லாரிகள் மீது பைக் மோதி மருத்துவமனை ஊழியர் பலி