ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் உரம் வாங்கும் போது இணைப்பு உரங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என ஊட்டியில் நடந்த உர விற்பனையாளர்களுடனான ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயமும், 7500 ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது.
தேயிைல மற்றும் காய்கறி விவசாயத்திற்கு தேவையான யூரியா, டிஏபி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாவட்ட முழுவதும் 272 தனியார் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் விற்பனை நிலையங்கள், 17 நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்சிஎம்எஸ்.,) ஆகியவை உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா, தரமான உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உர கட்டுபாட்டுத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மலை காய்கறி விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேயிலை மகசூலை அதிகரிக்க அவற்றிற்கு உரமிட்டு பராமரித்து வருகின்றனர். இதனிடையே நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு இப்பருவத்திற்கு தேவையான உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஊட்டி என்சிஎம்எஸ்., மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் லாவண்யா ஜெயசுதா வகித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் இருப்பு பதிவேட்டு, விற்பனை முனையக்கருவியுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. விவசாயிகள் உரம் வாங்கும்போது இணைப்பு உரங்களை வாங்க கட்டாயபடுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டனர். விற்பனை உரிமங்களில் இணைக்கப்படாத உரங்களை இருப்பில் வைத்து விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கப்பட்டனர். மீறினால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பயிர் வளர்ச்சி தூண்டிகளான (Biostimulents)ஐ விவசாயிகளுக்கு வழங்கும் போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மருந்துகளை மட்டுமே வழங்க அறிவுறுத்தப்பட்டனர். உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் கீழ் அனுமதி வழங்கப்பட்ட உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
டி.ஏ.பி உரத் தேவையை ஈடுகட்டும் வகையில் அதன் மாற்று உரமான சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் கூட்டு உரங்கள் ஆகியவற்றின் பயன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிக அளவில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டனர். கூட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியிலுள்ள உர விற்பனையாளர்களும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கம் விற்பனையாளர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) அமிர்தலிங்கம் நன்றி கூறினார்.
The post இணைப்பு உரங்களை வாங்குமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க கூடாது appeared first on Dinakaran.