ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் : மாஜி அமைச்சருக்கு ஐகோர்ட் அறிவுரை!!

சென்னை :ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும் எச்சரிக்கையுடனும் பேச முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. தமிழக அரசின் திட்டம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து அவதூறாக பேசியதாக திமுக நிர்வாகி ஒருவர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் சி.வி.சண்முகம் மீது திண்டிவனம் மற்றும் விழுப்புரம் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவில், “ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும். ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமைதான். ஆனால், அதில் கண்ணியம் தேவை.அடுத்த தலைமுறை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சி.வி.சண்முகம் ஒரு சாதாரண நபர் அல்ல. சட்டம் படித்தவர். முன்னாள் அமைச்சர். அவர் பொறுப்புடன் பேச வேண்டும்.அந்த காலம் கிடையாது. காலம் மாறிவிட்டது. நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை,” எனக் குறிப்பிட்டார். அப்போது, அரசு தரப்பில், “இதே போல் பல முறை பேசியுள்ளார். இது போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது, “என சுட்டிக் காட்டினார். இதையடுத்து அனைத்து மனுக்களையும் தான் ஒன்றாக விசாரித்து உத்தரவு பிறப்பிப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் : மாஜி அமைச்சருக்கு ஐகோர்ட் அறிவுரை!! appeared first on Dinakaran.

Related Stories: