செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: தலைவர்கள் வரவேற்பு

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: செந்தில் பாலாஜி 15 மாதம் சிறையில் இருந்தது தேவை இல்லாத ஒன்று என்பதை நீதிமன்றம் சொல்லியுள்ளது. திமுகவிற்காக செந்தில் பாலாஜி கடுமையாக உழைத்தார். கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக அவரை கைது செய்து உள்ளே வைத்திருந்தனர். அமலாக்கத்துறை வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த வழக்கை இழுத்தடித்து தாமதமாக்கினர். அதற்கு நீதிமன்றம் சரியான பதில் கொடுத்துள்ளது.

இது அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டியடி. பாஜ இனியாவது திருந்த வேண்டும். திருந்தவில்லை என்றால் கேடு காலம்தான். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கடந்த 11 ஆண்டுகால மோடி ஆட்சி எதிர்கட்சியினரை அடக்குவதற்கும், ஒடுக்குவதற்கும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றின் மூலம் அடக்குமுறையை ஏவிவிடுவதற்கும்தான் பயன்பட்டு வருகிறது. ஜார்கண்ட் முதலமைச்சர் சிபுசோரன், தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோர் மீது பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டது போல அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

அமலாக்கத்துறையின் அடக்குமுறையை அரசியல் பேராண்மையோடு எதிர்கொண்ட செந்தில் பாலாஜியை பாராட்டுகிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: செந்தில் பாலாஜி மீது வலிந்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விசாரணை நிலையிலிருக்கும் போதே, 15 மாத காலம் சிறை வைக்கப்பட்டு இருந்தார். எதிர்க்கட்சிகளை முடக்கி வைப்பதற்கு பாஜ அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தேர்தல் நேரங்களில் களப்பணிகளில் சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை, மக்களிடமிருந்து பிரித்து ஒதுக்கி தனிமைப்படுத்த ஏதேனும் குற்றம் சுமத்தி சிறையில் அடைப்பதை பாஜ ஒரு உத்தியாகவே கையாண்டு வருகிறது.

தேர்தல் ஆணையம், புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட அமைப்புகளை முடக்கி பாஜ அரசு தனதாக்கிக் கொண்டது. எனவேதான் பிணையில் கூட வெளிவர முடியாமல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பிணை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: 15 மாதம் சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் தியாகம் போற்றத்தக்கது. வழக்கு விசாரணை தொடங்காமலேயே 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது ஒன்றிய பாஜ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

அதிகாரத்திற்கு அஞ்சாமல் தலை வணங்காமல் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திப் பிணை பெற்றிருக்கிறார். உடல் நலத்தில் சற்று குன்றி இருந்தாலும் மனத் தைரியத்தில் விஞ்சி நின்று அதிகாரத்தை அதிர வைத்திருக்கிறார். இனி வரும் நாட்கள் மீண்டும் மக்கள் சேவையைத் தொடங்க வாழ்த்துகள்.

The post செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: தலைவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: