அக்.27ல் தவெக மாநாடு: காவல்துறை அனுமதி


விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த 23ம் தேதி முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடத்த அனுமதி கேட்டு நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளித்தனர். தொடர்ந்து 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குபின் மாநாட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டு அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் வெளியிட்டார். இதனைதொடர்ந்து கடந்த 21ம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு மீண்டும் விழுப்புரம் ஏடிஎஸ்பி திருமாலிடம் மனு அளித்தார்.

இந்நிலையில், 17 கட்டாய நிபந்தனைகளுடன் நேற்றுமுன்தினம் இரவு தவெக மாநாடுக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. குறிப்பாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, விளம்பர பதாகைகள், கட்-அவுட்டுகள் வைக்கக்கூடாது, முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பாக இடவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், மாநாட்டு திடலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும், மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்தி தர வேண்டும். விஐபிக்கள் வரும் வழிகளில் எந்தவித பிரச்னைகளும் நடக்காமல் போதிய தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post அக்.27ல் தவெக மாநாடு: காவல்துறை அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: